மலேசிய பரோட்டா மாஸ்டருக்கு சிங்கப்பூரில் ‘உயர் சம்பளம்’; பேசுபொருளான விவகாரம்

மலேசிய பரோட்டா மாஸ்டருக்கு சிங்கப்பூரில் ‘உயர் சம்பளம்’; பேசுபொருளான விவகாரம்

2 mins read
19f26752-76cf-492f-8c77-2ccd3a9cd12d
சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு பரோட்டா மாஸ்டர்களுக்கு ஏறத்தாழ $1,200 மாதச் சம்பளத்துடன் தங்குமிடம், உணவு ஆகியவை வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: பெரித்தா ஹரியான்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசிய பரோட்டா மாஸ்டருக்கு 5,000 ரிங்கிட் (S$1,420) மாதச் சம்பளம் வழங்கப்படும் என்று அண்மையில் மலேசியாவின் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

ஏப்ரல் மாதம் பிரசுரமான இந்த விளம்பரத்தில் மலேசிய பரோட்டா மாஸ்டருக்கு சம்பளத்துடன் தங்குமிடம், உணவு, இறை வழிபாட்டில் ஈடுபடுவதற்கான அறை ஆகியவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இது பேசுபொருளாக மாறியுள்ளது.

5,000 ரிங்கிட் சம்பளம் என்பது மலேசியாவில் அலுவலக ஊழியர்கள் சிலரின் ஊதியத்துக்கு ஈடானது என்று கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் விலைவாசி அதிகமாக இருப்பதால் பரோட்டா மாஸ்டருக்கு வழங்கப்படும் 5,000 ரிங்கிட் சம்பளம் போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்களுக்கு 5,000 ரிங்கிட் மாதச் சம்பளம் போதுமானதாக இருக்காது என்று மலேசிய உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் திரு ஜெரமி லிம், நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினார்.

“சிங்கப்பூரில் அறைகளுக்கான வாடகையே $600லிருந்து $800 வரை இருக்கிறது. அன்றாடச் செலவு, போக்குவரத்துக் கட்டணம் ஆகியவற்றால் செலவினம் அதிகமாக இருக்கும். 5,000 ரிங்கிட்டை சிங்கப்பூர் நாணயமாக மாற்றும்போது அது குறைவாகவே இருக்கும். சிங்கப்பூரின் விலைவாசியைக் கருத்தில்கொண்டால், இந்தச் சம்பளத்துக்கு வேலை செய்பவரின் வாழ்க்கைத் தரம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருக்காது,” என்றார் அவர்.

மலேசிய ஊழியர்களின் சராசரி மாதச் சம்பளம் 2,600 ரிங்கிட் என்று மலேசியப் புள்ளிவிவரத்துறையின் ஆக அண்மைய தரவுகள் காட்டுகின்றன.

இதற்கிடையே, 5,000 ரிங்கிட் மாதச் சம்பளம் தங்களை ஈர்ப்பதாக மலேசிய பரோட்டா மாஸ்டர்கள் கூறுகின்றனர்.

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு பரோட்டா மாஸ்டர்களுக்கு ஏறத்தாழ $1,200 மாதச் சம்பளத்துடன் தங்குமிடம், உணவு ஆகியவை வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதச் சம்பளம், தங்குமிடம், உணவு ஆகியவற்றை சேர்த்து வெளிநாட்டு பரோட்டா மாஸ்டரை வேலையில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு மாதந்தோறும் கிட்டத்தட்ட $2,400 செலவாகிறது என்று ஸ்பிரிங்லீஃப் பரோட்டா பிளேஸ் உணவகம் கூறியது.

குறிப்புச் சொற்கள்