காஸாவுக்கு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் $815,000 பெறுமானமுள்ள உதவி

காஸாவுக்கு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் $815,000 பெறுமானமுள்ள உதவி

2 mins read
5e487055-684c-4dad-813f-468a02a710ef
எகிப்தில்,காஸா எல்லைக்கருகில் மனிதாபிமான முறையில் செயல்படும் அவசரநிலை சமையல் கூடம். அங்கு தங்கள் இருப்பிடங்களில் இருந்து பெயர்ந்த குறைந்தது 7,000 குடும்பங்களுக்கு அன்றாடம் உணவு வழங்க எண்ணம் கொண்டுள்ளது. - படம்: சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்
Google News Preferred Icon

எகிப்தில் வடக்கு சைனாய் பாலைவனத்தில், காஸா எல்லைக்கு அருகே, சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆதரவுடன் அவசரகால மனிதாபிமான முறையில் சமையல் கூடம் ஒன்று செயல்படுகிறது. அங்கு தங்கள் இருப்பிடங்களிலிருந்து இடம் பெயர்ந்த கிட்டத்தட்ட 7,000 குடும்பங்களுக்கு அன்றாடம் சமைத்த உணவு வழங்கவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது காஸா பகுதி மக்களுக்கு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் மூன்றாவது முறையாக வழங்கும் திட்டத்தின் அங்கமாகிறது. இந்த உதவித் திட்டம் $815,000 பெறுமானமுள்ளது. காஸாவில் உள்ள மனிதநேய நெருக்கடியைத் தீர்க்க இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வடக்கு சைனாய் பகுதியில் உள்ள இந்த சமையல் கூடம் எகிப்திய செம்பிறை சங்கம் ஏற்பாடு செய்துள்ள தற்காலிக கூடாரங்களில் தங்கியிருப்பவர்களுக்கு உணவு வழங்கும்.

அத்துடன் இந்த செம்பிறைச் சங்கம் அரிசி, மாவுப் பொருள்கள், டுனா மீன் உணவு ஆகியவற்றையும் எகிப்தில் வாங்கி அங்குள்ள மக்களுக்கு உணவுப் பொட்டலங்களாக வழங்கும். இதை சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் டோபி காட் சாலையில் உள்ள தனது தலைமையகத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 24) அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தது.

இந்த உணவுப் பொட்டலங்கள் காஸாவில் உள்ள 9,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும். இவை ஒவ்வொன்றும் ஒரு குடும்பத்தின் ஒரு வார உணவுத் தேவைக்குப் போதுமானது என்று கூறப்பட்டுள்ளது.

“ஏறத்தாழ 1.5 மில்லியன் மக்கள் ராஃபா பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்களில் பிள்ளைகள், மாதர், ஆடவர்கள் அனைவரும் அடக்கம். இவர்கள் அனைவரும் பசியுடன் இருக்கின்றனர். பல குடும்பங்களுக்கு இரண்டு நாள்களில் ஒரு முறை சாப்பிடும் உணவு மட்டுமே கிடைக்கும் நிலையில் அவர்கள் தொடர் மனஉளைச்சல், பயத்தில் வாழ்கின்றனர்,” என்று சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமை அதிகாரி பென்ஞமின் வில்லியம் விளக்கினார்.

மத்திய கிழக்கில் காஸா பகுதியின் தெற்கு முனையில் எகிப்து நாட்டை ஒட்டி ராஃபா உள்ளது இங்கு நினைவுகூரத்தக்கது.

எட்டு தொண்டூழியர்கள் அடங்கிய குழு எகிப்திய தலைநகர் கெய்ரோவுக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் உணவுப் பொட்டலங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்க, பொட்டலமிட உதவுவர். இவர்கள் வெளிநாடுகளில் பேரிடர் நிவாரணப் பயிற்சி பெற்றவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும், எகிப்தின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் தொண்டூழியர் ஒருவர் அந்நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இத்துடன், அமெரிக்க டாலர் 200,000 பெறுமானமுள்ள ரத்த அழுத்தத்தைச் சோதிக்கும் சாதனங்கள், மருத்துவ முதலுதவிப் பொருள்கள் போன்றவையும் அங்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்