$20,000க்கும் அதிக பணம் வைத்திருக்கும் பயணிகள் அதுகுறித்து இணையம் மூலம் தெரிவிக்க வேண்டும்

$20,000க்கும் அதிக பணம் வைத்திருக்கும் பயணிகள் அதுகுறித்து இணையம் மூலம் தெரிவிக்க வேண்டும்

2 mins read
1c7e732a-8bdc-4dcc-bf95-6072fc3d011d
மே 13 அல்லது அதற்குப் பிறகு சிங்கப்பூருக்குள் வரும் அல்லது சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டுச் செல்ல இருக்கும் பயணிகள் $20,000க்கும் அதிகமான பணத்தை வைத்திருந்தால் அதுகுறித்து மே 10ஆம் தேதியிலிருந்து இணையம் மூலம் தகவல் தெரிவிக்கலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

மே மாதம் 13ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூருக்குள் நுழையும், சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டுச் செல்லும் பயணிகள் $20,000க்கும் அதிகமான பணம் வைத்திருந்தால் அதுகுறித்து இணையம் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

20,000 சிங்கப்பூர் வெள்ளி அல்லது அதற்கு இணையான வெளிநாட்டு நாணயம் இதற்குப் பொருந்தும்.

பயணிகள் வைத்திருக்கும் பணம் குறித்து தகவல் தெரிவிக்கும் முறையை எளிதாக்க இந்தப் புதிய நடவடிக்கை இலக்கு கொண்டுள்ளதாக ஏப்ரல் 19ஆம் தேதியன்று காவல்துறை வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

தற்போதைய நடப்பின்படி நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட அதிகமான பணம் வைத்திருக்கும் பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழையும்போதும் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டுச் செல்லும்போதும் படிவங்களைப் எழுத்துப்பூர்வமாகப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த அணுகுமுறை மே 13ஆம் தேதியன்று முடிவுக்கு வரும்.

பயணிகள் வைத்திருக்கும் பணம் தொடர்பான தகவல்கள் மிகவும் முக்கியம் என்று காவல்துறை தெரிவித்தது.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றம் போன்றவற்றை எதிர்க்க சிங்கப்பூர் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இது பெரிதும் உதவும் என்று காவல்துறை கூறியது.

இதுபோன்ற விதிமுறை பல நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை அது சுட்டியது.

மே 13 அல்லது அதற்குப் பிறகு சிங்கப்பூருக்குள் வரும் அல்லது சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டுச் செல்ல இருக்கும் பயணிகள் $20,000க்கும் அதிகமான பணத்தை வைத்திருந்தால் அதுகுறித்து மே 10ஆம் தேதியிலிருந்து இணையம் மூலம் தகவல் தெரிவிக்கலாம்.

சிங்கப்பூர் குடிநுழைவுச் சோதனைச்சாவடிகளை அடைவதற்கு முன்பு பயணிகள் தகவலைச் சமர்ப்பித்துவிட வேண்டும். அதன் பிறகு எழுத்துபூர்வப் படிவங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை.

பயண நாளுக்கு மூன்று நாள்களுக்கு முன்பு MyICA கைப்பேசி செயலி அல்லது குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் இணையப்பக்கத்துக்குச் சென்று இணையம் மூலம் இத்தகவலைப் பயணிகள் சமர்ப்பிக்கத் தொடங்கலாம்.

குறிப்புச் சொற்கள்
குடிநுழைவுபயணிகள்