‘சிங்கப்பூரர்களை ஏமாற்ற கட்டாயப்படுத்தப்பட்டேன்’

‘சிங்கப்பூரர்களை ஏமாற்ற கட்டாயப்படுத்தப்பட்டேன்’

2 mins read
7bc01cfd-43bc-4d11-b95e-d81e8a33d692
மோசடிக் கும்பலின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட திரு அப்துஸ் சலாம், மோசடிக் கும்பல்களுக்குச் சொந்தமான இடங்களில் அடைத்துவைக்கப்பட்டிருப்பவர்களை மீட்கும் பணியில் தீவிரம் காட்டுகிறார். - படம்: அப்துஸ் சலாம்
Google News Preferred Icon

சிங்கப்பூரர்களை ஏமாற்றிப் பணம் பறிக்க தம்மை மோசடிக் கும்பல் கட்டாயப்படுத்தியதாக பங்ளாதேஷியரான 27 வயது அப்துஸ் சலாம் தெரிவித்தார்.

கம்போடியாவில் தமக்கு அதிக சம்பளத்துடனான தகவல் தொழில்நுட்ப வேலை வழங்கப்பட்டுள்ளதாகத் தம்மிடம் தெரிவிக்கப்பட்டது என்று திரு சலாம் கூறினார்.

அதை நம்பி தமது குடும்பம் தங்களுக்குச் சொந்தமான நிலத்தை அடமானம் வைத்து ஆள்சேர்ப்புக் கட்டணத்தைச் செலுத்தியதாக அவர் கூறினார்.

ஆனால் கம்போடியாவை அடைந்ததும் மோசடிக் கும்பலின் பிடியில் சிக்கிப் பிறரை ஏமாற்ற தாம் கட்டாயப்படுத்தப்பட்டதாக திரு சலாம் தெரிவித்தார்.

மோசடிக் கும்பலுக்குச் சொந்தமான இடத்தில் தாம் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு அடைத்து வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் அதிகாரிகளால் மீட்கப்பட்டார்.

தற்போது சொந்த நாட்டில் இருக்கும் திரு சலாம், மனிதாபிமான ஆய்வு ஆலோசனை அமைப்பின் அதிகாரியாகப் பணியாற்றுகிறார்.

மோசடிக் கும்பல்களுக்குச் சொந்தமான இடங்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்போரை மீட்கும் பணியில் அவர் தீவிரம் காட்டுகிறார்.

நன்கு படித்தவர்களை ஈர்க்கும் வகையில் அதிக சம்பளத்துடனான வேலை தருவதாக விளம்பரம் செய்து மோசடிக்காரர்கள் ஏமாற்றுவதாக திரு சலாம் கூறினார்,

பொறியியல் துறை பட்டதாரியான தமக்கு கம்போடியாவில் 1,000 அமெரிக்க டாலர் (S$1,300) மாதச் சம்பளத்துடனான வேலையைத் தருவதாக தம்மிடம் தெரிவிக்கப்பட்டது என்று திரு சலாம் தெரிவித்தார். பங்களாதேஷில் தாம் ஈட்டிய வருமானத்தைவிட இது ஐந்து மடங்கு அதிகம் என்றார் அவர்.

வேலையில் சேர்ந்ததும் போலி சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்கும்படி தமக்கு உத்தரவிடப்பட்டதாக திரு சலாம் கூறினார்.

அவர்கள் சொல்வதற்கு பணியாதவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர், சிலர் கொல்லப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

பன்றி இறைச்சி தொடர்பாக முதலீடு செய்ய ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோருடன் தொடர்புகொள்ள வேண்டி இருந்ததாக அவர் கூறினார்.

சிங்கப்பூரர்கள் வசதி படைத்தவர்கள் என்றும் அவர்களை நம்பவைத்து, ஏமாற்றிப் பணம் பறிக்குமாறு தமது மேற்பார்வையாளர் தமக்கு உத்தரவிட்டதாக திரு சலாம் கூறினார்.

சிங்கப்பூரில் வர்த்தக ஆசையுடன் முதலீடு செய்யத் தயாராக இளையர்கள் பலர் காத்துக்கொண்டிருப்பதாகத் தம்மிடம் மோசடிக் கும்பல் தெரிவித்ததாக அவர் கூறினார்.

இந்தப் பன்றி இறைச்சி முதலீடு மோசடி தொடர்பாக உலகளாவிய நிலையில் பலர் 75 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
மோசடிஆள்கடத்தல்மீட்பு