ஜோகூர் பாருவில் சிங்கப்பூர் தொழிலதிபரின் சொகுசு காரில் திருட்டு

ஜோகூர் பாருவில் சிங்கப்பூர் தொழிலதிபரின் சொகுசு காரில் திருட்டு

2 mins read
2debc4f7-51b0-48df-bb0b-84d3c788b5f4
செவ்வாய்க்கிழமை டிக்டாக்கில் திரு ரினோ வெளியிட்ட காணொளியில் இடம்பெற்ற காட்சி. - காணொளிப் படம்: WHATEVER4193/TIKTOK
Google News Preferred Icon

வழக்கம்போல ஜோகூர் பாருவுக்குச் சென்ற சிங்கப்பூரர் ஒருவருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) அதிர்ச்சி காத்திருந்தது.

ஜோகூர் பாருவில் உள்ள சந்தை ஒன்றுக்குச் சென்றுவிட்டு காருக்குத் திரும்பிய அவர்கள், அதன் சன்னல்கள் நொறுக்கப்பட்டு இருப்பதைக் கண்டனர்.

ரினோ என்று அழைக்கப்பட விரும்பும் அந்தத் தொழிலதிபர், பாண்டான் மொத்த விற்பனைச் சந்தையில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நள்ளிரவுக்குப் பிறகு ‘தமது பிஎம்டபிள்யு 218ஐ கிரேன் கூ’ ரக காரை நிறுத்தி வைத்திருந்தார்.

ஏறக்குறைய 50 நிமிடங்கள் கழித்து, அங்கிருந்து புறப்பட காருக்குத் திரும்பிய ரினோ குடும்பத்தினர், காரின் ஓட்டுநர் கதவுக்கு மேலே பெரிய ஓட்டை இருந்ததைக் கவனித்தனர்.

பாரந்தூக்கியை இயக்குவதற்கான உரிமம், 100 ரிங்கிட் (S$28) பெறுமானமுள்ள ரொக்கம், திறன் கைக்கடிகாரம், வீட்டுச் சாவிகள் அடங்கிய பை ஒன்று காணாமல் போனதை அவர்கள் கண்டறிந்தனர்.

இச்சம்பவத்துக்குப் பிறகு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் பை ஓட்டுநர் இருக்கையின்கீழ் வைக்கப்பட்டிருந்ததாக அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

உடைக்கப்பட்ட கார் சன்னலை மாற்றுவதற்கு ஏறக்குறைய $500 செலவாகும் என திரு ரினோ, 47, மதிப்பிடுகிறார்.

“துணிமணி வாங்குவதற்காக அங்கு சற்று நேரம் இருந்தோம். இம்முறை எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என நினைக்கிறேன்,” என்றார் அவர்.

தமது சொந்த காரான ‘பிஎம்டபிள்யு 216டி கிரேன் டுவரர்’ ரக கார் பழுதுபார்க்கப்படுவதால், ‘பிஎம்டபிள்யு 218ஐ’ ரக கார் தமக்கு தற்காலிக மாற்றாக வழங்கப்பட்டதாக திரு ரினோ குறிப்பிட்டார்.

காரில் உள்ள கண்காணிப்புக் கருவி அணைக்கப்பட்டதால் திருட்டுச் சம்பவம் அதில் பதிவாகவில்லை என்றார் அவர்.

ஜோகூர் பாருவுக்கு 20 ஆண்டு காலமாக சென்று வந்துள்ள அவர், இச்சம்பவத்தை எதிர்கொண்டு இருப்பது இதுவே முதன்முறை.

செவ்வாய்க்கிழமை டிக்டாக்கில் திரு ரினோ வெளியிட்ட காணொளிப் பதிவில், பாண்டான் பகுதிக்குச் செல்பவர்கள் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தினார்.

View post on TikTok
குறிப்புச் சொற்கள்