யூனோஸ் தொழிற்பேட்டையில் மூண்ட தீ நான்கு மணி நேரத்தில் அணைக்கப்பட்டது: யாரும் காயம் அடையவில்லை

யூனோஸ் தொழிற்பேட்டையில் மூண்ட தீ நான்கு மணி நேரத்தில் அணைக்கப்பட்டது: யாரும் காயம் அடையவில்லை

1 mins read
238261a7-5fb3-4214-ae1e-1f43c9f7cef6
கட்டடத்தில் இருந்த மூன்று ஆலைகளுக்குள் வைக்கப்பட்டிருந்த கட்டுமானப் பணிகளுக்கான பொருள்களும் அவற்றின் அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்ட பொருள்களும் தீப்பிடித்து எரிந்ததாக அதிகாரிகள் கூறினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

யூனோஸ் தொழிற்பேட்டையில் ஏப்ரல் 2ம் தேதி இரவு மூண்ட தீ நான்கு மணிநேரத்தில் அணைக்கப்பட்டது.

தீச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

1049 யூனோஸ் அவென்யூ 6ல் ஏற்பட்ட தீச்சம்பவம் குறித்து இரவு 9.15 மணி அளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

அந்த வட்டாரத்தைத் தவிர்க்கும்படி பொதுமக்களை அதிகாரிகள் அப்போது கேட்டுக்கொண்டிருந்தனர்.

பாதிக்கப்பட்ட கட்டடத்தைச் சுற்றித் தடுப்பு போடப்பட்டது.

இரவு 9.45 மணி அளவில் சம்பவ இடத்தை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் அடைந்தபோது வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் அதனைத் தொடர்ந்து, கொழுந்துவிட்டு எரிந்த அந்தக் கட்டடத்திலிருந்து கரும்புகை கிளம்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை அடுத்து , சுவாசக் கருவிகளை அணிந்துகொண்டு தீயணைப்புப் படையினர் புகை நிறைந்த ஆலைகளுக்குள் நுழைந்தனர்.

உள்ளே சென்றதும் தீயணைப்புப் பணிகளை அவர்கள் தொடர்ந்தனர். பாதிக்கப்பட்ட ஆலைகளில் ஒன்றின் கூரை இடிந்து விழுந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டடத்தில் இருந்த மூன்று ஆலைகளுக்குள் வைக்கப்பட்டிருந்த கட்டுமானப் பணிகளுக்கான பொருள்களும் அவற்றின் அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்ட பொருள்களும் தீப்பிடித்து எரிந்ததாக அதிகாரிகள் கூறினர்.

தீச்சம்பவத்தின் விளைவாக ஏற்பட்ட கடும் வெப்பத்தாலும் புகையாலும் பாதிக்கப்பட்ட ஆலைகளுக்கு அருகில் இருந்த இரண்டு ஆலைகளும் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்புப் பணிகளில் ஏறத்தாழ 70 தீயணைப்புப் படை வீரர்கள் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்குக் கிட்டத்தட்ட 19 அவசரகால வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

குறிப்புச் சொற்கள்