உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே 21 மோட்டார் சைக்கிளோட்டிகள் கைது

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே 21 மோட்டார் சைக்கிளோட்டிகள் கைது

2 mins read
5f0e64eb-8cd9-4a48-b50e-04572a29227b
பல்வேறு அதிகாரிகள் ஒன்றிணைந்து நடத்திய சோதனையின்போது 269 மோட்டார் சைக்கிளோட்டிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். - படம்: சிங்கப்பூர் காவல்துறை
Google News Preferred Icon

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே அதிகாரிகள் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையின்போது 21 மோட்டார் சைக்கிளோட்டிகள் கைது செய்யப்பட்டனர்.

போக்குவரத்துக் குற்றங்கள் தொடர்பில் மொத்தம் 70 அழைப்பாணைகள் பிறப்பிக்கப்பட்டன.

கடந்த வாரம் வியாழக்கிழமை (மார்ச் 21) நடைபெற்ற அந்த நடவடிக்கைகள் தொடர்பில் காவல்துறை இன்று அறிக்கை வெளியிட்டது.

போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகளுடன் தேசிய சுற்றுப்புற வாரியம், நிலப்போக்குவரத்து ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகளும் ஒன்றிணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சிங்கப்பூரின் போக்குவரத்துச் சட்டங்கள், பாதுகாப்பு மற்றும் கரிம வெளிப்பாடு தொடர்பான விதிமுறைகளை மோட்டார் சைக்கிளோட்டிகள் கடைப்பிடிக்கின்றனரா என்பதை உறுதிசெய்ய அந்தச் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது 269 மோட்டார் சைக்கிளோட்டிகள் தடுத்து நிறுத்தப்பட்டு சோதிக்கப்பட்டனர்.

அவர்களில் 23 பேரிடம் ஓட்டுநர் உரிமமும் காப்புறுதி ஆவணங்களும் இல்லை.

உரிமம் இன்றி வாகனம் ஓட்டும் குற்றத்துக்கு $10,000 வரை அபராதமும் மூன்றாண்டு வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.

அந்த 23 பேரில் 21 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காகவும் மற்றொருவர் ஆள்மாறாட்டம் செய்ததற்காகவும் கைது செய்யப்பட்டனர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டும் குற்றத்துக்கு $2,000 முதல் $10,000 வரை அபராதமும் ஓராண்டு வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம். எந்த வாகனத்தையும் ஓட்டக்கூடாது என்று குற்றவாளிகளுக்குத் தடை விதிக்கப்படலாம்.

மோட்டார் சைக்கிள்களில் இருந்து அதிகப்படியான புகை வெளியேறியதற்காகவும் அதிக இரைச்சல் ஏற்பட்டதற்காகவும் 39 அழைப்பாணைகளை தேசிய சுற்றுப்புற வாரியம் பிறப்பித்தது.

முறையான பதிவெண் பலகை வைக்காதது, காலாவதியான வாகன நுழைவு அனுமதியை வைத்திருந்தது, காலாவதியான சாலை வரி மற்றும் காப்புறுதிக்கான ஆவணங்களை வைந்திருந்தது போன்ற குற்றங்களுக்கான தனியாக 31 அழைப்பாணைகளையும் வாரியம் அளித்தது.

வெளிநாட்டில் பதிவு செய்த வாகனங்கள் உள்ளிட்ட எல்லா வாகனங்களும் சிங்கப்பூருக்குள் நுழையும்போது இங்குள்ள போக்குவரத்துச் சட்டங்கள், பாதுகாப்பு மற்றும் கரிம வெளிப்பாடு தொடர்பான விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது கட்டாயம் என்று காவல்துறை தெரிவித்து உள்ளது.

குறிப்புச் சொற்கள்
போக்குவரத்து