குடிபோதையில் பேருந்து ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் ஆடவர் கைது

குடிபோதையில் பேருந்து ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் ஆடவர் கைது

2 mins read
38a8abc4-d322-4c58-b8dc-6c4d74521986
சாலையில் நடுவில் இருந்த சாலைத் தடுப்பு மீது மோதி பிறகு சாலையோரம் இருந்த மரத்தின் மீது பேருந்து மோதியது. - படம்: ஷின்மின் வாசகர்
Google News Preferred Icon

குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் தனியார் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த 33 வயது ஆடவர் பேருந்தைவிட்டு இறங்கியதை அடுத்து, அப்பேருந்து பின்னோக்கிச் சென்று சாலையின் நடுவில் இருந்த தடுப்பின்மீது மோதியது. பிறகு சாலையோரம் இருந்த மரத்தின் மீது பேருந்து மோதியது. பேருந்து மோதியதில் அந்த மரம் சாய்ந்தது.

இந்தச் சம்பவம் மார்ச் 26ஆம் தேதி பிடோக் நார்த் அவென்யூ 2ல் நிகழ்ந்தது. காலை 9.30 மணி அளவில் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது. சம்பவம் நிகழ்ந்தபோது பேருந்தில் யாரும் இல்லை என்றும் பேருந்தின் கதவு திறந்திருந்தது என்றும் நேரில் கண்ட சாட்சியான 50 வயது திரு ஹான், ஷின்மின் நாளிதழிடம் கூறினார்.

பேருந்து மரத்தின் மீது மோதி நின்ற பிறகு அந்த ஓட்டுநர் ஓடிச் சென்று அதில் ஏறியதாக அவர் தெரிவித்தார். அதன்பிறகு, சாலைப் போக்குவரத்துக்கு எதிர்த்திசையில் அந்தப் பேருந்து ஏறத்தாழ 100 மீட்டர் ஓட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்துச் சந்திப்பில் வலது பக்கமாகத் திரும்பி மீண்டும் முதலில் சென்றுகொண்டிருந்த சாலைக்குள் அது புகுந்தது. பேருந்து ஓட்டுநரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பிறகு அவர் கைகளுக்கு விலங்கு மாட்டி அழைத்துச் சென்றனர்.

அந்தப் பேருந்து சிங்கப்பூர் கோச் சர்விசஸ் நிறுவனத்துக்குச் சொந்தமானது.

கைது செய்யப்பட்ட ஓட்டுநர் சிங்கப்பூரர் என்றும் அவர் சில நாள்களுக்கு முன்பு வேலையில் சேர்ந்தார் என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்துகிறது.

குறிப்புச் சொற்கள்
கைதுசாலை விபத்து