ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சித் திட்டங்களில் பங்கேற்றோர் எண்ணிக்கை குறைந்தது

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சித் திட்டங்களில் பங்கேற்றோர் எண்ணிக்கை குறைந்தது

2 mins read
0eb753da-0711-4be2-85bb-67077ee855fa
2023ல் 520,000 பேர் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஆதரவு பெற்ற பயிற்சித் திட்டங்களில் பங்கேற்றனர். 2022ல் அந்த எண்ணிக்கை 560,000ஆகப் பதிவானது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு (2023) ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் (எஸ்எஸ்ஜி) ஆதரவு பெற்ற பயிற்சித் திட்டங்களில் பங்கேற்றோர் எண்ணிக்கை, அதற்கு முந்தைய ஆண்டைவிடக் குறைவாகப் பதிவானது.

சென்ற ஆண்டு 520,000 பேர் அத்தகைய பயிற்சிகளில் பங்கேற்றனர். 2022ல் அந்த எண்ணிக்கை 560,000ஆக இருந்தது.

2023ல் கூடுதலான முதலாளிகள் தங்கள் ஊழியர்களை இத்தகைய பயிற்சிகளுக்கு அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 23,000 நிறுவனங்கள் அவற்றின் 228,000 ஊழியர்களை ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஆதரவு பெற்ற பயிற்சிகளுக்கு அனுப்பின.

ஒப்புநோக்க, 2022ல் 20,000 நிறுவனங்களின் 168,000 ஊழியர்கள் அத்தகைய பயிற்சிகளுக்குச் சென்றனர்.

மார்ச் 22ஆம் தேதி, ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு இந்தத் தகவல்களை வெளியிட்டது.

சென்ற ஆண்டு எஸ்எஸ்ஜி பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றோரில் ஏறக்குறைய 200,000 பேர் பணியிடைக்கால ஊழியர்கள். ஓராண்டுக்கு முன்புடன் ஒப்பிடுகையில் இந்த விகிதம் 28 விழுக்காடு அதிகம்.

சென்ற ஆண்டு ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சித் திட்டங்களில் பங்கேற்றோர் எண்ணிக்கை குறைந்ததற்கு, பயிற்சி தருவதற்கு முன்பே ஊழியர்களை வேலைக்கு எடுக்க நிறுவனங்கள் முனைந்ததும் கொவிட்-19 கிருமிப் பரவல் காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் திறன் மேம்பாட்டுக்கான நெருக்குதல் குறைந்ததும் காரணங்கள் என்று எஸ்எஸ்ஜி அமைப்பின் தலைமை நிர்வாகி டான் கொக் யாம் கூறினார்.

இருப்பினும் நிறுவனங்கள் கூடுதலான ஊழியர்களை பயிற்சிகளுக்கு அனுப்பும் போக்கு ஊக்கமளிப்பதாக அவர் குறிப்பிட்டார். அவற்றில் 97 விழுக்காடு, சிறிய, நடுத்தர நிறுவனங்கள் என்பதை அவர் சுட்டினார்.

“நிறுவனங்கள், ஊழியர்கள், பயிற்சி வழங்குவோர் என எல்லாத் தரப்பிலும், வாழ்நாள் கற்றல் மீதான கூட்டுக் கடப்பாடு அதிகரிப்பதை இது காட்டுகிறது,” என்றார் அவர்.

பணியிடைக்கால ஊழியர்களுக்கு இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் கூடுதல் ஆதரவு அறிவிக்கப்பட்டிருப்பதால், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சித் திட்டங்களில் பங்கேற்கும் 40 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் திரு டான் கூறினார்.

குறிப்புச் சொற்கள்