சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்திற்கு மூன்று புதிய வரவுகள்

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்திற்கு மூன்று புதிய வரவுகள்

2 mins read
9961815e-bb00-4e63-a673-b556dfef1be9
இடமிருந்து வலம் : நூலாசிரியர் ஹேமாவின் தந்தை திரு.வரதராஜன், மகள் ரித்திகா, திரு.பொன் சுந்தரரசு, கணவர் திரு.ஏழுமலை, நூலாசிரியர் ஹேமா மற்றும் திரு நா.ஆண்டியப்பன். - படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்
Google News Preferred Icon

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில், கழகத்தின் பொருளாளர் மணிமாலா மதியழகன், செயலவை உறுப்பினர் ஹேமா இருவரது மூன்று நூல்களின் வெளியீடு 3.3.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் தேசிய நூலகத்தின் 5ஆவது தளத்திலுள்ள இமேஜினேஷன் அறையில் நடைபெற்றது.

வரவேற்புரை ஆற்றிய கழகத்தின் செயலாளர் பிரேமா மகாலிங்கம் விழாவுக்கு வந்திருந்தோரை வரவேற்று கதைக்களத்தில் எழுதும் வளரும் எழுத்தாளர்களுக்கு வாசிப்பின் அவசியத்தை எடுத்துரைத்தார்.

கழகத் தலைவர் நா. ஆண்டியப்பன் தலைமை உரையில், நம் நாட்டில் தமிழ் தொடர்ந்து செழித்து வளர இளையர்கள் அதிகம் எழுத வேண்டும் என்றார். சமீப காலமாக நூலகத்தில் பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகள் அரங்கேறுவதைக் குறிப்பிட்ட அவர், தமிழ்மீது பற்றுள்ளவர் தலைமைப் பொறுப்புக்கு வந்ததால் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். எழுத்தாளர்களுக்கும் நூலகத்திற்குமுள்ள இத்தகைய நல்ல கூட்டுறவு தொடர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஹேமாவின் ‘ஆதிநிலத்து மனிதர்கள் கட்டுரை நூலை அறிமுகம் செய்து உரையாற்றிய முனைவர் ந.செல்லக்கிருஷ்ணன், இலைமறை காய்போலுள்ள சிங்கப்பூரின் 700 ஆண்டு கால வரலாற்றை நூலாசிரியர் பல ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளதாகக் கூறினார். பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைத்து செய்ய வேண்டிய ஆய்வை எழுத்தாளர் தனி ஒருவராகச் சிறப்பாகப் படைத்துள்ளதாகவும் பாராட்டினார்.

ஹேமாவின் ‘முகம் தொலைத்தவனின் அகக்குறிப்புகள்’ சிறுகதைத் தொகுப்பு நூலை அறிமுகப்படுத்திய கங்கா பாஸ்கரன், கதாபாத்திரங்கள் கதையைக் கைபிடித்து அழைத்துப் போவதையும் கதையின் ஊடாகப் புகுத்தப்பட்டுள்ள வாழ்வியல் விழுமியங்களையும் கதைகள் சமூகப் பொறுப்புடன் எழுதப்பட்டுள்ளதையும் எடுத்துரைத்தார்.

மணிமாலா மதியழகனின் ‘ஆழிப்பெருக்கு’ சிறுகதைத் தொகுப்பு நூலை அறிமுகப்படுத்திய எழுத்தாளர் இராம வயிரவன், நூலிலுள்ள நுணுக்கமான சித்தரிப்புகளையும் கதாமாந்தர்களின் உணர்வுகளைக் கதையைப் படிக்கும் வாசகர்களுக்கும் கடத்துகிற தன்மையையும் கதைகளில் சமூகப் பிரச்சினைகளைக் கையாண்டுள்ள விதத்தையும் நயம்பட எடுத்துக் கூறினார்.

நூலாசிரியர்கள் இருவரது ஏற்புரைக்குப் பின் நூல்களின் வெளியீடுகள் நடைபெற்றன.

‘ஆதிநிலத்து மனிதர்கள்’ நூலை மா.வரதராஜன் வெளியிட, சிராங்கூன் டைம்ஸ் சஞ்சிகையின் ஆசிரியர் முகமது காசிம் ஷாநவாஸ் பெற்றுக்கொண்டார்.

‘முகம் தொலைத்தவனின் அகக்குறிப்புகள்’ நூலை எஸ். எம். ஏழுமலை வெளியிட, எழுத்தாளர் பொன் சுந்தரராசு பெற்றுக்கொண்டார்.

‘ஆழிப்பெருக்கு’ நூலை மு.மணிவண்ணன் வெளியிட, முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.

கழகத்தின் உதவிப் பொருளாளர் திருவாட்டி பிரதீபா வீரபாண்டியன் விழாவை நெறிப்படுத்தினார்.

குறிப்புச் சொற்கள்