சாலையில் சிதறிய பொருள்களை அகற்றியோருக்குக் குவியும் பாராட்டு

சாலையில் சிதறிய பொருள்களை அகற்றியோருக்குக் குவியும் பாராட்டு

1 mins read
f941e77d-c244-42c0-9d02-69e82b2ce219
சாலையில் சிதறிக் கிடந்த பொருள்களை போக்குவரத்து விளக்கு பச்சையைக் காட்டுவதற்குள் விரைவாக அப்புறப்படுத்திய எட்டுப் பேர். - படம்: Roads.Sg ஃபேஸ்புக்
Google News Preferred Icon

கனிவன்பு மிகுந்த நாடு சிங்கப்பூர் என்பது அவ்வப்போது நிரூபிக்கப்படுகிறது. அதை மீண்டும் நிரூபிக்கும் ஒரு சம்பவத்தைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.

லாரி ஒன்றில் இருந்து கீழே விழுந்த பொருள்களை இதர வாகனங்களில் இருந்தவர்கள் அப்புறப்படுத்திய சம்பவம் அது.

கிராஞ்சி விரைவுச்சாலை அருகே புக்கிட் தீமாவில் நிகழ்ந்த இச்சம்பவம் Roads.Sg ஃபேஸ்புக் சமூக ஊடகக் குழுவில் சனிக்கிழமை (மார்ச் 16) பதிவேற்றப்பட்டது.

அச்சம்பவத்தை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை 155,000க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த கனிவன்பு செயலைப் பாராட்டி கருத்துரைத்து உள்ளனர்.

சாலையில் சென்றுகொண்டு இருந்த லாரியில் நிறைய பொருள்கள் ஏற்றப்பட்டு இருந்தன.

போக்குவரத்து விளக்கு சிவப்பு நிறத்தைக் காட்டியதும் சாலை ஓரம் லாரியை நிறுத்தியபோது அதிலிருந்த பொருள்கள் சாலையில் விழுந்து சிதறின.

அதனைக் கண்ட எட்டுப் பேர் வெவ்வேறு பகுதிகளில் இருந்து ஓடி வந்து சாலையில் இருந்து அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தினர்.

போக்குவரத்து விளக்கு பச்சை நிறத்தைக் காட்டுவதற்குள், சிதறிக் கிடந்த பொருள்கள் அனைத்தையும் அவர்கள் அப்புறப்படுத்தியதை காணொளி காட்டியது.

அவர்களில் சிலர், அருகில் நின்ற இதர வாகனங்களின் ஓட்டுநர்கள்.

மேலும் சிலர் அந்த வாகனங்களில் பயணம் செய்தவர்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அந்த 26 விநாடி காணொளியைக் கண்டவர்கள், ஒருவருக்கு ஒருவர் உதவும் நோக்கில் சாலைப் பயனாளர்கள் செய்த சிறப்பான செயல் என்று பாராட்டினர்.

குறிப்புச் சொற்கள்
சாலை