இரண்டாம் காலாண்டு மசே நிதி கணக்குகளின் வட்டி விகிதம் சற்று குறையும்

இரண்டாம் காலாண்டு மசே நிதி கணக்குகளின் வட்டி விகிதம் சற்று குறையும்

2 mins read
Google News Preferred Icon

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மத்திய சேம நிதி (மசேநி) சிறப்பு, மெடிசேவ், ஒய்வுக்காலக் கணக்குகளுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 4.05 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல் காலாண்டில் இந்த விகிதம் 4.08 விழுக்காடாக இருந்தது.

10ஆண்டு-சிங்கப்பூர் அரசாங்கப் பங்குபத்திரங்களிலிருந்து கடந்த 12 மாதங்களில் கிடைத்த வருவாயுடன் ஒரு விழுக்காடு சேர்த்து, மசே நிதியின் மூன்று கணக்குகளுக்கான வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுவதாக மசே நிதிக் கழகமும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் (வீவக) மார்ச் 12ஆம் தேதி வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன. அது குறைந்தபட்ச வட்டி விகிதமான 4 விழுக்காட்டைவிட அதிகமாக இருப்பதை அவை சுட்டின.

“நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதம் குறைந்தபட்ச விகிதத்தைவிட அதிகமாக இருந்தால், உறுப்பினர்கள் தங்கள் மசே நிதிச் சேமிப்புக்குக் கூடுதல் வட்டி விகிதத்தைப் பெறுவர்,” என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங், 2022 ஆகஸ்டு 2ஆம் தேதி நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் அரசாங்கம் குறைந்தபட்ச வட்டி விகிதத்தை 4 விழுக்காடாக வைத்திருப்பதை அவர் சுட்டினார்.

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மசே நிதி சாதாரணக் கணக்கிற்கான (ஓஏ) வட்டி விகிதம், மாற்றம் ஏதுமின்றி 2.5 விழுக்காடாகத் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், வீவக வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதச் சலுகை 2.6 விழுக்காடாகத் தொடரும்.

55 வயதை எட்டாத மசே நிதி உறுப்பினர்களின் கணக்குகளில் உள்ள முதல் $60,000க்குக் கூடுதலாக ஒரு விழுக்காட்டு வட்டித் தொகை வழங்கப்படும் நடைமுறை தொடரும். ‘ஓஏ’ கணக்கிற்கு இவ்வாறு அதிகபட்சம் $20,000 மட்டுமே வழங்கப்படும்.

55 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோர்க்கு முதல் $30,000க்குக் கூடுதலாக 2 விழுக்காட்டு வட்டித் தொகையும், அடுத்த $30,000க்கு கூடுதலாக ஒரு விழுக்காட்டு வட்டித் தொகையும் வழங்கும் நடைமுறையும் தொடரும். ‘ஓஏ’ கணக்கிற்கு இவ்வாறு வழங்கப்படும் அதிகபட்சத் தொகை $20,000 என்று கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்