போதைப்பொருளால் பாதிப்பு: மே மாதம் நினைவுகூரப்படுவர்

போதைப்பொருளால் பாதிப்பு: மே மாதம் நினைவுகூரப்படுவர்

2 mins read
1d0331b5-3cc7-4835-9899-5a0ccf982e10
போதைப்பொருளால் பாதிக்கப்பட்டோருக்கான நினைவு தினத்தன்று அரசாங்கம், பள்ளிகள், உயர்க் கல்வி நிலையங்கள் ஆகியவை பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யும் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்தார். - படம்: பெரித்தா ஹரியான்
multi-img1 of 2
Google News Preferred Icon

போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் காரணமாகப் போதைப் பித்தர்கள், அவர்களது குடும்பத்தினர், அன்புக்குரியவர்கள் ஆகியோருக்கு ஏற்படும் பாதிப்புகள் ஏராளம்.

இதன் காரணமாக இவ்வாண்டு முதல் போதைப்பொருளால் பாதிக்கப்பட்டோருக்கான நினைவு தினம் ஒவ்வொரு மே மாதம் அனுசரிக்கப்படும் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் பிப்ரவரி 29ஆம் தேதியன்று தெரிவித்தார்.

அதன்படி, முதல் நினைவு தினம் இவ்வாண்டு மே மாதம் 17ஆம் தேதியன்று அனுசரிக்கப்படும்.

உள்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தின்போது அமைச்சர் சண்முகம் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசினார்.

போதைப்பொருளால் பாதிக்கப்பட்டோருக்கான நினைவு தினத்தன்று அரசாங்கம், பள்ளிகள், உயர் கல்வி நிலையங்கள் ஆகியவை பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

“போதைப்பொருளுக்கு எதிரான பிரசாரம், நடவடிக்கைகள் ஆகியவை பொதுவாகப் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீதும் அவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகள் மீதும் கவனம் செலுத்துகின்றன. ஆனால், இப்பிரச்சினையால் அவதியுறும் மேலும் பலரைப் பற்றியும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

“போதைப்பொருள் வணிகத்தாலும் கடத்தல்காரர்களாலும் போதைப் பித்தர்கள், அவர்களது குடும்பத்தினர், அன்புக்குரியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

“போதைப்பொருளுக்கு எதிரான பிரசாரம், நடவடிக்கைகள் இத்தரப்பினரை மறந்துவிடுகின்றன.

“ஆனால், இவர்களையும் இவர்கள் அனுபவித்த வேதனைகளையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் போதைப்பொருளால் ஏற்பட்ட தீங்கு, கொடுமைகளை மறந்துவிடக்கூடாது,” என்று அமைச்சர் சண்முகம் வலியுறுத்தினார்.

இந்த நினைவு தினத்தை அனுசரிக்கும் திட்டம் அமைச்சுகள் நிலை இளையர் போதைப்பொருள் தடுப்புக் குழுவால் முன்வைக்கப்பட்டது.

இந்தக் குழு 2023ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இதற்கு அமைச்சர் சண்முகம் தலைமை தாங்குகிறார்.

குறிப்புச் சொற்கள்