3 வயது சிறுவனை இருட்டறையில் வைத்துப் பூட்டியதாகப் பாலர் பள்ளி ஆசியர்களுக்கு எதிராகப் புகார்

3 வயது சிறுவனை இருட்டறையில் வைத்துப் பூட்டியதாகப் பாலர் பள்ளி ஆசியர்களுக்கு எதிராகப் புகார்

2 mins read
eaa7fa5c-a730-4ee2-8fa1-6b7531d5d0e5
தமது மகன் பள்ளிக்குப் போக பயந்ததைத் தாம் உணர்ந்ததாக சிறுவனின் தாயார் தெரிவித்தார். - படம்: நியூ பேப்பர் கோப்புப்படம்
Google News Preferred Icon

புவாங்கோக் வட்டார பாலர் பள்ளி ஒன்றில் 3 வயதுச் சிறுவன் ஆசிரியர்களால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மூன்று ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக ‘இசிடிஏ’ எனப்படும் பாலர்பருவ மேம்பாட்டு அமைப்பு கூறியுள்ளது.

தமது மகனை அப்பள்ளி ஆசிரியர்கள் இருட்டறையில் வைத்துப் பூட்டியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் சிறுவனின் தாயார் தெரிவித்தார்.

அந்தப் பாலர் பள்ளியின் ஆசிரியர்கள் தமது மகனைப் பலமுறை அடித்து, கிள்ளி மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதாகவும் அவர் கூறினார்.

அந்தச் சிறுவன் ஓராண்டுக்கு மேலாக அந்தப் பாலர் பள்ளியில் பயின்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

நாள்கள் செல்லச் செல்ல தமது மகன் பள்ளிக்குப் போக பயந்ததைத் தாம் உணர்ந்ததாக சிறுவனின் தாயார் தெரிவித்தார்.

மற்றவர்களிடன் அவன் மூர்க்கத்தனமாக நடந்துகொள்ளத் தொடங்கியதாக அவர் கூறினார்.

இந்நிலையில், தமது ஆசிரியர்கள் தம்மை இருட்டறையில் வைத்துப் பூட்டியதாக பிப்ரவரி 22ஆம் தேதி இரவு தமது மகன் தம்முடன் பகிர்ந்துகொண்டதாக அவர் தெரிவித்தார்.

பள்ளியில் உள்ள கழிவறையில் அந்தச் சிறுவன் தண்ணீரில் விளையாடியதால் அதற்குத் தண்டனையாக அவ்வாறு செய்யப்பட்டது என்று அறியப்படுகிறது.

இதுகுறித்து, பிப்ரவரி 23ஆம் தேதி பாலர் பள்ளியில் புகார் அளித்ததாக சிறுவனின் தாயார் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் அதுகுறித்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சம்பந்தப்பட்ட பாலர் பள்ளி தெரிவித்துள்ளது.

சம்பவம் குறித்து பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகப் பாலர் பள்ளி கூறியது.

இந்த விவகாரம் குறித்து நடத்தப்படும் விசாரணையில் முழுமையாக ஒத்துழைப்பதாகப் பாலர் பள்ளி தெரிவித்தது.

சம்பந்தப்பட்ட சிறுவன் தற்போது அப்பள்ளியில் பயிலவில்லை.

அதே பாலர் பள்ளியில் மேலும் பல மாணவர்கள் ஆசிரியர்களால் துன்புறுத்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்