பிரபோவோ அதிபராவது சிங்கப்பூர்-இந்தோனீசிய உறவுகளுக்கு நன்மை பயக்கும்: பகுப்பாய்வாளர்கள் கருத்து

பிரபோவோ அதிபராவது சிங்கப்பூர்-இந்தோனீசிய உறவுகளுக்கு நன்மை பயக்கும்: பகுப்பாய்வாளர்கள் கருத்து

2 mins read
65125193-456c-4e50-9f1c-562ca090f7a0
அடுத்த இந்தோனீசிய அதிபராகப் போகும் பிரபோவோ சுபியாந்தோ. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

ஜகார்த்தா: திரு பிரபோவோ சுபியாந்தோ கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி, அதிபர் தேர்தல் பிரசாரத்தை தொடங்க ஒரு வாரம் இருக்கும் நிலையில், சிங்கப்பூருக்கு நாட்டின் ஆக உயரிய ராணுவ விருதைப் பெற வந்தார்.

அவருக்கு ‘டார்ஜா உத்தமா பக்தி செமர்லாங்’ என்ற ராணுவத்தின் தனித்துவ சேவை வழங்கியதற்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அவருக்கு அந்த விருதை வழங்கிய சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு, சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையிலான தற்காப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் அவர் தலைமையின் கீழ் மறுஉறுதிப்படுத்தப்பட்டது என அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

அந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உறவை வலுப்படுத்தி உள்ளதை அறிக்கை நினைவுகூர்ந்தது.

2022ஆம் ஆண்டு கையெழுத்தான அந்த ஒப்பந்தம் உருவாக்க உதவியவர் திரு பிரபோவோ என்று கூறிய தற்காப்பு அமைச்சு, இருநாட்டு தற்காப்பு உறவில் அது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று வர்ணித்தது.

அத்துடன், திரு பிரபோவோ இருநாடுகளுக்கு இடையே நிலவும் நீண்டகால, அணுக்க உறவுகளுடன் அணுக்க ஒத்துழைப்புக்கும் குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்துள்ளார் என்றும் தற்காப்பு அமைச்சு தெளிவுபடுத்தியது.

இவை எல்லாம் திரு பிரபோவோ சிங்கப்பூருக்கு எவ்வளவு பரிச்சயமானவர் என்று எடுத்துக்காட்டுவதாகவும் இது இருநாட்டு உறவுகளுக்கு நன்மை பயக்கும் என்றும் அரசியல் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தோனீசிய அதிபர் தேர்தல் வாக்குகளில் 66.6% வாக்குகள் பிப்ரவரி 16ஆம் தேதி எண்ணப்பட்ட நிலையில் திரு பிரபோவா பெரும் வாக்கு வித்தியாசத்தில் தேர்தலில் வெல்வார் எனத் தெரிய வந்துள்ளது.

வாக்குப் பதிவின் இறுதி நிலவரம் மார்ச் மாதம்தான் தெரியவரும் என்றபோதும் ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கை முன்னாள் ராணுவத் தளபதியான பிரபோவாதான் அடுத்த அதிபராக வருவார் என்பதைப் புலப்படுத்துகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து தற்காப்பு அமைச்சராக உள்ள பிரபோவோ, தமக்கு அடுத்த நிலையில் உள்ள வேட்பாளரைவிட இரு மடங்குக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்துடன் முன்னிலை வகிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
இருதரப்பு உறவு