‘உணவு காலாவதி தேதிக்கு வரையறை நிர்ணயித்தால் உணவு விலை உயரும்’

‘உணவு காலாவதி தேதிக்கு வரையறை நிர்ணயித்தால் உணவு விலை உயரும்’

2 mins read
46744eed-88a0-4f4f-ac5a-491b58226a84
சிங்கப்பூருக்கு தேவையான உணவு வகைகளில் 90% 170 நாடுகள், வட்டாரங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்

உணவுப் பொருள்களுக்கு குறிப்பிட்ட தேதிக்குள் பயன்படுத்தவும் என்றோ குறிப்பிட்ட தேதிவரை உணவு சிறந்த நிலையில் இருக்கும் என்றோ வரையளவு நிர்ணயிப்பது அதற்கான விலையை ஏறுவதில் போய் முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

அதுவும் குறிப்பாக, 90% உணவு வகைகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் இந்த நிலை ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாறாக, இந்த இரண்டு விதமான வரையறைகளையும் தாண்டினால் உணவு உண்பதற்கு உகந்ததாக இராது என்று பயனீட்டாளர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் டாக்டர் கோ போ கூன் புதன்கிழமை (பிப்ரவரி 7) அன்று நாடாளுமன்றத்தில் விளக்கினார்.

செங்காங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹி டிங் ரு உணவுப் பொருள்கள் குறிப்பிட்ட தேதிக்குள் பயன்படுத்தவும் அல்லது குறிப்பிட்ட தேதிவரை உணவு சிறந்த நிலையில் இருக்கும் என்பதை வரைமுறைப் படுத்த முடியுமா என்று கேட்டார். அவ்வாறு செய்வது உணவை வீசி எறிவதா என்ற குழப்பத்தைக் குறைப்பதுடன் உணவு வீணாவதையும் குறைக்கும் என்றார். இதற்கு பதிலளித்த டாக்டர் கோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் தொடர்பில் விளக்கமளித்த சிங்கப்பூர் உணவு அமைப்பு, குறிப்பிட்ட தேதிக்குள் பயன்படுத்தவும் என்ற குறிப்பு பால், தயிர் போன்ற அதிகம் கெட்டுப்போகக் கூடிய உணவு வகைகளுக்கு பொருந்தும். பயனீட்டாளர்கள் இவற்றை குறிப்பிட்ட தேதிக்குப் பின் உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

குறிப்பிட்ட தேதிவரை உணவு சிறந்த நிலையில் இருக்கும் என்ற குறியீடு எவ்வளவு நாள் அந்த உணவு சிறந்த தரநிலையில் இருக்கும் என்பதைக் குறிக்கிறது என்று கூறியுள்ளது.

தொடர்ந்து பேசிய டாக்டர் கோ, சிங்கப்பூர் சந்தைக்காக பயன்படுத்தப்பட வேண்டிய தேதியை குறிப்பிட்ட கால நிர்ணயத்துக்குள் வரைமுறைப்படுத்தி தயார் செய்வது கூடுதல் செலவுக்கு வழிவிடும் என்று சொன்னார்.

குறிப்புச் சொற்கள்