சிடிசி பற்றுச்சீட்டுகளில் இதுவரை $255 மில்லியனைச் செலவழித்த குடும்பங்கள்

சிடிசி பற்றுச்சீட்டுகளில் இதுவரை $255 மில்லியனைச் செலவழித்த குடும்பங்கள்

2 mins read
4b34d992-3c57-411d-ad87-bf49bb561034
95 விழுக்காடு சிங்கப்பூரர் குடும்பங்கள் சிடிசி பற்றுச்சீட்டுகளைப் பெற்றுள்ளன. எஞ்சிய குடும்பங்கள் அவற்றைப் பெற்றுக்கொள்ள ஆண்டிறுதி வரை அவகாசம் உள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஜனவரி தொடக்கத்தில் வழங்கப்பட்ட சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளில் (சிடிசி) இதுவரை $255 மில்லியன் செலவிடப்பட்டு உள்ளது.

இவற்றில் $99 மில்லியன் மதிப்பிலான பற்றுச்சீட்டுகள், சிடிசி பற்றுச்சீட்டுத் திட்டத்தில் பங்கேற்றுள்ள கடைகள் மற்றும் உணவங்காடி நிலையங்களிலும் எஞ்சிய $156 மில்லியன் பேரங்காடிகளிலும் செலவிடப்பட்டு உள்ளன.

வர்த்தக, தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

இவ்வாண்டுக்கான சிடிசி பற்றுச்சீட்டுகளின் விநியோகம் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கியது.

எல்லா சிங்கப்பூரர் குடும்பங்களும் செலவுகளைச் சமாளிக்க பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம் என பேரங்காடிகள் விளம்பரம் செய்து திட்டத்தை ஆதரித்ததன் பயனாக இந்த அளவுக்கு அவை பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி உறுப்பினர் சக்தியாண்டி சுபாட் எழுப்பிய கேள்விகளுக்கு திருவாட்டி லோ பதிலளித்தார்.

பிப்ரவரி 6ஆம் தேதி நிலவரப்படி, 1.2 மில்லியன் சிங்கப்பூரர் குடும்பங்கள் அல்லது 95 விழுக்காட்டு குடும்பங்கள் இவ்வாண்டுக்கான பற்றுச்சீட்டுகளைப் பெற்றுவிட்டன.

மொத்தம் $635 மில்லியன் பெறுமானமுள்ள பற்றுச்சீட்டுகள் 1.27 மில்லியன் குடும்பங்கள் பயன்பெறும் விதமாக வெளியிடப்பட்டன.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் $500 மதிப்பிலான பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன. அவற்றில் பாதித் தொகையை பேரங்காடிகளிலும் எஞ்சிய பாதியை குடியிருப்புப் பேட்டைகளில் சிடிசி பற்றுச்சீட்டுத் திட்டத்தில் பங்குபெறும் கடைகளிலும் உணவங்காடி நிலையங்களிலும் செலவழிக்கலாம்.

பற்றுச்சீட்டுகளை டிசம்பர் 31ஆம் தேதி வரை பயன்படுத்தலாம். அதேபோல பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளாத குடும்பங்கள் ஆண்டிறுதிக்குள் அவற்றைப் பெற்று செலவழிக்கலாம்.

இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட தொகையைக் காட்டிலும் இவ்வாண்டுக்கான பற்றுச்சீட்டின் தொகை அதிகம் என்று திருவாட்டி லோ தெரிவித்தார்.

இவ்வாண்டு $500 பெறுமானமுள்ள பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன. கடந்த ஆண்டு இந்தத் தொகை $300 ஆகவும் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் இது $150 ஆகவும் இருந்தது.

குறிப்புச் சொற்கள்