சவால்களை முறியடித்த குறைமாத குழந்தை

சவால்களை முறியடித்த குறைமாத குழந்தை

2 mins read
4540049b-65ad-498c-848d-d82e5b93d4f0
கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் (KKH) பிறந்த செல்சி கியூ, 2018ஆம் ஆண்டில் குறைமாத குழந்தையாக பிறந்திருந்தார்.  - படம்: ரேமண்ட் கியூ, அஸ்மி அத்னி
Google News Preferred Icon

கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் பிறந்த செல்சி கியூ, 2018ஆம் ஆண்டில் குறைமாதக் குழந்தையாக பிறந்திருந்தார்.

புதிதாகப் பிறந்த குழந்தைகளின் எடை பொதுவாக 2.5 கிலோ முதல் 3.5 கிலோ வரை இருக்கும்.

ஆனால், அவர் பிறக்கும்போது 510 கிராம் எடையும் 28 சென்டிமீட்டர் நீளமும் மட்டுமே இருந்தார்.

கடந்த பத்து ஆண்டுகளில், 22 வாரங்கள் அல்லது ஏறக்குறைய ஐந்து மாதங்களில் பிறந்த குறைமாத குழந்தைகளுக்கிடையே செல்சி மட்டுமே உயிர் பிழைத்திருக்கிறார்.

அவர் உயிர் பிழைக்க, பல சிகிச்சைகளைப் பெற்றார். மேலும், அவர் பிறந்ததற்குப் பின், 166 நாள்கள் மருத்துவமனையில் இருந்தார்.

அவருடைய பெற்றோர், ஒவ்வொரு நாளும் அவரை மருத்துவமனையில் சென்று பார்த்ததோடு, அவருக்குக் கதைகளைச் சொல்வார்கள்.தன்னம்பிக்கையை வளர்க்கவும், உலகத்தை ஆராயவும் அவர்கள் ஊக்குவித்தனர்.

குறைமாதக் குழந்தைகளுக்கு இத்தகைய ஆதரவு முக்கியமானது என்று செல்சியின் பெற்றோர் நம்புகிறார்கள்.

தற்போது ஐந்து வயதான செல்சி மற்ற மழலையர் பள்ளிக் குழந்தைகளைப் போலவே இருக்கிறார் என்று வர்த்தகப் பகுப்பாய்வாளரான அவருடைய தந்தை ரேமண்ட் கியூ கூறினார்.

குறைமாத குழந்தையாக பிறந்த செல்சி, நல்ல வேளையாக பெரிய சிக்கல்களை  ஏதிர்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், அவர் இதயத்தில் ஒரு சிறிய துளை உள்ளது என்றும் அதற்கு அவருக்கு வழக்கமான பரிசோதனை தேவைப்படுகிறது என்றும் கூறினார்.

“அவருக்கு இந்தத் துளையால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. அவருடைய மனநிலையைப் பொறுத்து அவரால் இன்னும் ஓட முடியும், எல்லா நடவடிக்கைகளிலும் பங்கேற்க முடியும்,” என்று திரு கியூ கூறினார்.

பெரும்பாலும் 22 வாரங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு உயிர் பிழைக்கும் அறிகுறிகள் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கும்.

ஆனால், செல்சி பிறக்கும்போது மிகவும் சுறுசுறுப்பாக இருந்ததோடு நல்ல இதயத் துடிப்புடனும் மற்ற உடல் நலத்திற்கான பிற அறிகுறிகளுடனும் இருந்தார் என்று கேகே மகளிர், சிறார் மருத்துவமனையின் சிசு வளர்ச்சி ஆய்வியல் துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர் டான் பிஹ் லின் கூறினார்.

குறிப்புச் சொற்கள்