ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயில் விபத்து ஏற்படுத்தியவர்மீது கூடுதல் குற்றச்சாட்டு

1 mins read
2b866b37-80ca-4a88-9f8a-0737cc14ad97
படம்: - தமிழ் முரசு

ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயில் 2023 நவம்பர் 8ஆம் தேதி விபத்து ஏற்படுத்தியதாக ரஷ்ய ஆடவர் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

அவ்விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் மரணமடைந்தார். இந்நிலையில், திங்கட்கிழமை (ஜனவரி 15) அந்த ஆடவர் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

சம்பவ நாளன்று விரைவுச்சாலையில் அவர் இருந்தது தெரிய வந்ததையடுத்து, சாலைப் போக்குவரத்து விதிகளின்படி அந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

எல்டானிஸ் இபிஷோவ் என்ற அந்த ஆடவர் சம்பவ நாளன்று காலை 11 மணியளவில் ஓடும் வாகனத்திலிருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது. அவரது செயலால் அருகில் சென்றுகொண்டிருந்த லாரி ஒன்றை திடீரென்று நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அப்போது, அவ்வழியாக மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்ற முகம்மது நூர்ஹில்மி, 27, ​லாரியின் பின்பகுதியில் மோத நேர்ந்தது.

கடுமையாகக் காயமுற்ற நூர்ஹில்மி, சுயநினைவற்ற நிலையில் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆயினும், சிகிச்சை பலனின்றி அன்றே அவர் உயிரிழந்துவிட்டார்.

இபிஷோவ் எதற்காக ஓடிக்கொண்டு இருந்த வாகனத்திலிருந்து குதித்தார் என்பதை நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை.

குறிப்புச் சொற்கள்
விபத்துகுற்றம்