அயலகத் தமிழர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் சண்முகம்

அயலகத் தமிழர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் சண்முகம்

2 mins read
ef7e9a43-460b-4c06-8338-f0a888186095
மூன்றாம் அயலகத் தமிழர் தின விழாவில் வெள்ளிக்கிழமை (ஜன. 12), சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் மூன்றாம் அயலகத் தமிழர் தின விழாவில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) , சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுவார்.

தமிழ்நாட்டு அரசாங்கம் விடுத்த அழைப்பை ஏற்று அவர் அதில் கலந்துகொள்கிறார்.

தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், இளையர் நல, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றுவர்.

மூன்று தலைவர்களும் ஒன்றிணைவது தமிழ்நாட்டுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே உள்ள நெருக்கமான பண்பாட்டு, பொருளாதாரப் பிணைப்பைக் காட்டுகிறது.

‘தமிழ் வெல்லும்’ என்ற கருவில் ஜனவரி 11, 12ஆம் தேதிகளில் நடைபெறும் அயலகத் தமிழர் தின விழாவில் சிங்கப்பூரிலிருந்து இளையர்கள், தமிழ் அமைப்புகளின் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளடங்கிய 128 பேர் கலந்துகொள்கின்றனர். அவர்களில் சிலர் நிகழ்ச்சியில் உரையாற்றுவர்.

தமிழின் தொன்மை, தொடர்பு, கவிதை வாசிப்பு, அயலகத் தமிழர்களுக்கு தமிழக அரசாங்கத்தின் நலத்திட்டங்கள், எதிர்காலத்துக்குத் தயாராகுதல், வர்த்தகத்தில் தமிழர்களின் வளர்ச்சி, தமிழின் வளர்ச்சியில் அயலகத் தமிழர்களின் பங்கு, வெளிநாட்டில் தமிழ்க் கல்வி போன்றவை சார்ந்த கருத்தரங்குகள் நடைபெறும்.

வெவ்வேறு நாடுகளின் தமிழ் அமைப்புகள் தத்தம் நடவடிக்கைகளைப் பற்றி கலைநிகழ்ச்சி அல்லது படைப்பு வாயிலாகப் பகிர்ந்துகொள்ளலாம்.

விழாவில் இடம்பெறும் கண்காட்சியில் சிங்கப்பூர்த் தமிழ் அமைப்புகளுக்கு ஒரு முகப்பு வழங்கப்படும்.

இவ்வாண்டு கூடுதல் சிறப்பாக, அவரவர் துறைகளில் சிறப்பாகத் திகழும் பல்வேறு தமிழர்கள் விருதுகளைப் பெறுவர். அவ்வகையில் சிங்கப்பூரிலிருந்து தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் மு.ஹரிகிருஷ்ணன், தமிழர் பேரவைத் தலைவர் வெ.பாண்டியன் இருவரும் விருது பெறுவர்.

தமிழ்நாட்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு, பத்தாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடுகளைத் தொடர்ந்து அயலகத் தமிழர் தின விழா நடைபெறுகிறது. தொழிலதிபர்கள் பலர் மூன்று நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள இது ஏதுவாக இருப்பதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்