புத்தாண்டில் இதுவரை 83 பேர் வங்கி மோசடியில் சிக்கினர்; $155,000 இழப்பு

2 mins read
7ecf9c5c-28a1-4c23-ad08-5603f04a7f36
டிபிஎஸ் வங்கியைப் பயன்படுத்தி அனுப்பப்பட்ட மோசடி குறுந்தகவல்கள். - படம்: காவல்துறை

புத்தாண்டு தொடங்கியது முதல் இதுவரை டிபிஎஸ் வங்கியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இணைய மோசடியில் 83 பேர் சிக்கினர். மோசடிகளில் அவர்கள் இழந்த தொகை குறைந்தபட்சம் $155,000.

இத்தகவலை வெள்ளிக்கிழமை (ஜனவரி 5) வெளியிட்ட காவல்துறை, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு மீண்டும் வலியுறுத்தியது.

டிபிஎஸ் வங்கியைப் பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்தும் போலியான குறுந்தகவல்களை அனுப்பியும் தொடர்ந்து நடைபெறும் மோசடிகள் குறித்து காவல்துறை எச்சரித்து உள்ளது.

இணைய வங்கியில் வாடிக்கையாளர் பயன்படுத்தும் பயனாளர் பெயர், கடவுச்சொல், ஓடிபி எனப்படும் ஒருமுறை அனுப்பப்படும் ரகசிய எண் ஆகியவற்றை மோசடிக்காரர்கள் ஊடுருவுவார்கள்.

பெரும்பாலான சம்பவங்களில் டிபிஎஸ் வங்கியின் பெயரில் வாடிக்கையாளர்கள் குறுந்தகவலைப் பெறுவர்.

டிபிஎஸ் வங்கிக் கணக்கில் அனுமதியற்ற முறையில் ஊடுருவும் சாத்தியம் இருப்பதாகப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதுபோல அந்தக் குறுந்தகவல் இருக்கும்.

பரிவர்த்தனைகளை நிறுத்த வங்கி வாடிக்கையாளரின் அடையாளம் தேவை என்றும் அதற்காக குறுந்தகவலில் உள்ள இணைப்பைச் சொடுக்குமாறும் குறுந்தகவலில் கேட்டுக்கொள்ளப்படும்.

அந்த இணைப்பைச் சொடுக்கியதும் டிபிஎஸ் வங்கி பெயரிலான போலி இணையத்தளத்திற்கு அவர்களை அந்த இணைப்பு அழைத்துச் செல்லும்.

அங்கு, வாடிக்கையாளர்கள் தங்களின் விவரங்களை அளித்தவுடன் மோசடிக்காரர்கள் அவற்றைப் பயன்படுத்தி பணத்தை எடுத்துவிடுவர்.

சில சம்பவங்களில் டிபிஎஸ் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பெயரில் போலியான வாட்ஸ்அப் தகவலும் அனுப்பப்படும். வாடிக்கையாளரின் மின்னிலக்கப் பணப்பையில் (இ-வேலட்) இருந்து அனுமதியின்றி பணம் எடுக்கப்பட்டதாகக் காட்டும் போலி வங்கி அறிக்கை அந்தத் தகவலில் இடம்பெறும்.

இதுபோன்ற சம்பவங்களில் தங்களது வங்கிக் கணக்குகளில் அனுமதியற்ற பரிவர்த்தனைகள் நடைபெற்றதை உண்மையாக அறிந்த பின்னரே தாங்கள் ஏமாற்றப்பட்டதை பொதுமக்கள் உணர்வர்.

எனவே, மோசடிகளில் இருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுமாறு பொதுமக்களை காவல்துறை கேட்டுக்கொண்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்