சிடிசி பற்றுச்சீட்டுகள்: போலி இணையத்தளங்கள் குறித்து மக்கள் கழகம் எச்சரிக்கை

சிடிசி பற்றுச்சீட்டுகள்: போலி இணையத்தளங்கள் குறித்து மக்கள் கழகம் எச்சரிக்கை

2 mins read
e0747a8a-7050-4454-83f2-3200c31d5a0a
பற்றுச்சீட்டுகளை go.gov.sg/cdcv என்ற தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். - படம்: சமூக மேம்பாட்டு மன்ற பற்றுச்சீட்டு
Google News Preferred Icon

சிங்கப்பூர் குடும்பங்கள், சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகளைப் பெற அதிகாரபூர்வமற்ற இணையத்தளங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று மக்கள் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

500 வெள்ளி மதிப்புள்ள பற்றுச்சீட்டுகளைப் பெற பல்லாயிரக்கணக்கான மக்கள் அதிகாரபூர்வமற்ற இணையத்தளங்களில் வரிசை பிடித்து காத்திருப்பதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து மக்கள் கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.

இதுகுறித்து ஏற்கெனவே காவல்துறையில் புகார் கொடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் கழகம் தெரிவித்தது.

பற்றுச்சீட்டுகளை go.gov.sg/cdcv என்ற தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். gov.sg என்று முடியாத இணையப் பக்கங்களை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் கழகம் கேட்டுக்கொண்டது.

பற்றுச்சீட்டு தொடர்பான இணையமுகவரி ‘ரிடீம்எஸ்ஜி’ என்னும் கணக்கில் இருந்து பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே சிங்பாஸ் கணக்கைப் பயன்படுத்தி அந்தப் பற்றுச்சீட்டைப் பெறமுடியும்.

மேலும் ‘ரிடீம்எஸ்ஜி’ குறுஞ்செய்தி மூலம் தனிநபர் விவரங்கள், வங்கி கணக்குகள் குறித்த விவரங்களை கேட்காது என்று மக்கள் கழகம் நினைவூட்டியது.

பொதுவாக பற்றுச்சீட்டு வழங்கப்படும் இணையமுகவரியின் தொடக்கம் https://voucher.redeem.gov.sg என்று இருக்கும் என்று கழகம் குறிப்பிட்டது.

போலியான இணையத்தளங்களை மக்கள் அணுக வேண்டாம் என்றும் மோசடிகளை தவிர்க்குமாறும் கழகம் கேட்டுக்கொண்டது.

பற்றுச்சீட்டு தொடர்பான அதிகாரபூர்வ இணையமுகவரி வீடுகளுக்கு அஞ்சல் கடிதம் மூலமும் அனுப்பப்படும். மேலும் சமூக மேம்பாட்டு மன்றத்தின் சமூக ஊடக பக்கங்களிலும் இருக்கும்.

பற்றுச்சீட்டு தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் குறுஞ்செய்திகள் வந்தால் பொதுமக்கள் 6225-5322 அல்லது 1800-255-0000 என்று தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு புகார் கொடுக்கலாம்.

https://vouchers.cdc.gov.sg என்ற இணையத்தளத்திலும் சிடிசி பற்றுச்சீட்டுகள் குறித்த மேல்விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்