மூலாதாரப் பணவீக்கம் 3.2 விழுக்காட்டுக்கு இறங்கியது

மூலாதாரப் பணவீக்கம் 3.2 விழுக்காட்டுக்கு இறங்கியது

2 mins read
8b4d28a0-2d37-4b2c-a1bd-55ac1cb54869
மூலாதாரப் பணவீக்கம் கடந்த மாதம் குறைந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் கடந்த மாதம் மூலாதாரப் பணவீக்கம், ஒட்டுமொத்த பயனீட்டாளர் பணவீக்கம் ஆகியவை குறைந்தன. சில்லறை வர்த்தகப் பொருள்கள், உணவு, மின்சாரம், எரிவாயு, போக்குவரத்து ஆகியவற்றின் விலைகள் மெதுவாக அதிகரித்ததே இதற்குக் காரணம்.

தனியார் போக்குவரத்து மற்றும் தங்குமிடத்துக்கான செலவினங்களைச் சேர்க்காத மூலாதாரப் பணவீக்கம் உள்ளூர் குடும்பங்களின் செலவினங்களை நன்கு பிரதிபலிக்கிறது.

உள்ளூர் மூலாதாரப் பணவீக்கம் ஆண்டு அடிப்படையில் கடந்த மாதம் 3.2 விழுக்காடாகப் பதிவானது.

அக்டோபர் மாதத்தைவிட இது 0.1 விழுக்காடு குறைவு. பல மாதங்களாக மெதுவாக அதிகரித்து வந்த பயனீட்டாளர் விலைகள் அக்டோபர் மாதத்தில் ஏற்றம் கண்டன.

ஒட்டுமொத்த பணவீக்கம் கடந்த மாதம், அண்டு அடிப்படையில் 3.6 விழுக்காடாகக் குறைந்தது. அக்டோபர் மாதத்தில் அது 4.7 விழுக்காடாக இருந்தது. தனியார் போக்குவரத்துப் பணவீக்கம் குறைந்ததே இதற்கு முக்கிய காரணம்.

கடந்த மாதம், மாத அடிப்படையில் மூலாதாரப் பயனீட்டாளர் விலைகள் 0.1 விழுக்காடு உயர்ந்தன. இதற்கு உணவு, சேவைகள் ஆகியவற்றின் விலைகள் அதிகரிப்பே காரணம்.

இருப்பினும், ஒட்டுமொத்த பணவீக்கம் மாத அடிப்படையில் 0.2 விழுக்காடு குறைந்தது. தனியார் போக்குவரத்துச் செலவுகள் குறைந்ததே இதற்கு முக்கிய காரணம்.

மூலாதாரப் பணவீக்கம் கிட்டத்தட்ட தற்போதைய நிலையைப் போன்றே தொடரும் என்றும் ஆண்டிறுதியில் அது 2.5 விழுக்காட்டிலிருந்து 3 விழுக்காடு வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக, தொழில் அமைச்சு மற்றும் சிங்கப்பூர் நாணய ஆணையம் டிசம்பர் 26ஆம் தேதியன்று தெரிவித்தன.

பொருள், சேவை வரி அடுத்த ஆண்டு 9 விழுக்காடாக உயர்வதால் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் மூலாதாரப் பணவீக்கம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், ஒட்டுமொத்த அடிப்படையில் மூலாதாரப் பணவீக்கத்தின் ஏற்றம் அடுத்த ஆண்டு மிதமான அளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

உள்ளூர் தொழிலாளர் சந்தையின் இறுக்கமும் ஏற்றுமதிச் செலவு அழுத்தங்களும் தொடர்ந்து குறைவதால் இந்நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாண்டுக்கான சராசரி ஒட்டுமொத்த பணவீக்கம் ஏறத்தாழ 5 விழுக்காடாகவும் சராசரி மூலாதாரப் பணவீக்கம் 4 விழுக்காடாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு ஒட்டுமொத்த பணவீக்கம் சராசரியாக 3 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடாக இருக்கும் என்றும் மூலாதாரப் பணவீக்கம் சராசரியாக 2.5 விழுக்காட்டிலிருந்து 3.5 விழுக்காடாக இருக்கும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்