டோமினோ’ஸ் பீட்சா போலி இணையத்தளம் மூலம் $27,000 மோசடி

டோமினோ’ஸ் பீட்சா போலி இணையத்தளம் மூலம் $27,000 மோசடி

2 mins read
fcdefe59-ddcc-4dc0-b04c-960dd1c14415
டோமினோ’ஸ் பீட்சா போலக் காட்டும் போலி இணையத்தளங்கள். - படம்: காவல்துறை
Google News Preferred Icon

டோமினோ’ஸ் பீட்சா இணையத்தளம் போல போலியாக உருவாக்கப்பட்டு நடைபெற்ற மோசடியில் ஏழு பேர் $27,000 பணத்தைப் பறிகொடுத்து உள்ளனர்.

நவம்பர் 25ஆம் தேதிக்கும் டிசம்பர் 6ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்த மோசடி நடந்திருப்பதாக காவல்துறை தெரிவித்தது.

இணையம் மூலம் ‘டோமினோ’ஸ் பீட்சா’ கடையைத் தேடிய பலரும் போலி இணையத்தளத்திற்குள் தங்களை அறியாமல் நுழைந்து பணத்தை இழந்ததாக சனிக்கிழமை (டிசம்பர் 16) காவல்துறை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

டோமினோ’ஸ் பீட்சாவின் உண்மையான இணையத்தளம் dominos.com.sg.

ஆனால், ஏமாந்தவர்கள் domino-plza.com மற்றும் order.domino.piza.com என்னும் போலி இணையத்தளங்களைப் பயன்படுத்தியதன் மூலம் மோசடியில் சிக்கியதாக அறிக்கை குறிப்பிட்டது.

போலி இணையத்தளத்தின் வடிவமைப்பு உண்மையான டோமினோ’ஸ் பீட்சா இணையத்தளம் போலவே உருவாக்கப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது.

போலி இணையத்தளத்தில் உணவு கேட்டு ‘ஆர்டர்’ செய்தபோது கடன்பற்று அட்டை (கிரெடிட் கார்ட்) விவரங்களை மோசடியில் ஏமாந்தோர் கொடுத்தனர். மோசடிக்காரர்கள் அந்த விவரங்களை தவறாகப் பயன்படுத்தி பணத்தைச் சுரண்டிவிட்டனர்.

தங்களது கடன்பற்று அட்டையிலிருந்து சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகள் நடைபெறுவதை அறிந்த பின்னரே தாங்கள் மோசடி மூலம் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்ந்ததாக காவல்துறை தெரிவித்தது.

பொதுமக்கள் அதிகாரத்துவ இணையத்தளங்களை நன்கு சோதித்து, மோசடிக்கு ஆளாகாமல் பாதுகாத்துக்கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டு உள்ளது.

சந்தேகம் எழுந்தால், சொந்த விவரங்கள் அல்லது பணம் செலுத்தும் அட்டை தொடர்பான விவரங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்றும் காவல்துறை நினைவூட்டுகிறது.

மோசடி பரிவர்த்தனைகள் நிகழ்ந்தது தெரிய வந்தால் அதுகுறித்து உடனடியாக தங்களது வங்கியிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் மோசடி நடைபெறுவது குறித்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்துகிறது.

மேலும், பொதுமக்கள் தங்களது கைப்பேசியில் ScamShield செயலியைப் பதிவிறக்கம் செய்து பாதுகாப்பு அம்சங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதும் காவல்துறையின் வேண்டுகோள்.

குறிப்புச் சொற்கள்