பார்ப்பதற்கு சிங்கப்பூர் கடப்பிதழ் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் உறைகள் இனி ‘தௌபாவ்’ எனும் சீன வர்த்தக இணையத்தளத்தில் விற்கப்படாது.
உறைகளின் விற்பனை சட்டமீறலாகும் என்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு ‘தௌபாவ்’ தளத்துடன் தொடர்புகொண்டு தெரிவித்ததாக அமைச்சின் பேச்சாளர் கூறியுள்ளார்.
இந்த போலி தோற்றத்தை உடைய பாஸ்போர்ட் உறைகள் 138 யுவென் (25.90 வெள்ளி) என்ற விலையில் தௌபாவ் தளத்தில் டிசம்பர் தொடக்கத்தில் விற்கப்பட்டன.
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சிங்கப்பூர் கடப்பிதழ்களைப் போன்றே இந்த உறைகளில் சிவப்புநிறப் பின்னணியில் சிங்கப்பூர் குடியரசின் அடையாளச் சின்னம் இடம்பெற்றுள்ளது. கருப்பு, ஊதா நிறங்களிலும் இவை கிடைக்கின்றன.
முறையான அனுமதி பெறாமல் இவ்வாறு நாட்டுச் சின்னத்தைக் கொண்ட எந்தவொரு பொருளையும் விற்பது சட்டவிரோதமானது என்று அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
தேசிய சின்னங்கள் சட்டம் 2023ன்படி, அரசாங்கப் பிரிவுகளின் பயன்பாட்டுக்கு மட்டுமே சிங்கப்பூர் அடையாளச் சின்னம் உரியது என்ற கட்டுப்பாடு உள்ளது.
இந்த உறைகள் தண்ணீர் புகாத தன்மையுடன் விலங்கு தோலால் (லெதர்) செய்யப்பட்டவை என விற்பனை செய்தோர் விளம்பரம் செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.

