போதைப்பொருள், போக்குவரத்துக் குற்றங்கள்: இரு ஆடவர்கள் சிக்கினர்

போதைப்பொருள், போக்குவரத்துக் குற்றங்கள்: இரு ஆடவர்கள் சிக்கினர்

1 mins read
65108576-f245-4bdc-9b29-e29339ee12dc
கறுப்பு நிற கார் ஒன்று சாலைத் தடுப்பில் மோதியதைக் காட்டும் காணொளி ஒன்றை சீன நாளிதழ் கண்டது. - படம்: சாவ் பாவ்
Google News Preferred Icon

போதைப்பொருள் மற்றும் போக்குவரத்து தொடர்பான குற்றங்களுக்காக இரு ஆடவர்களை காவல்துறை விசாரித்து வருகிறது.

சனிக்கிழமை (டிசம்பர் 9) காலை பார்ட்லி ரோட்டில் நிகழ்ந்த ஒரு கார் விபத்தைத் தொடர்ந்து அவ்விருவரும் சிக்கினர்.

காரை ஓட்டிச் சென்றவரின் வயது 40 என்றும் காரில் இருந்த ஆடவரின் வயது 41 என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் காவல்துறை தெரிவித்தது.

காலை 7.55 மணியளவில் பிராடல் ரோட்டை நோக்கிச் செல்லும் பார்ட்லி ரோட்டில் கார் சறுக்கியதாக நம்பப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

காரில் இருந்த இரு ஆடவர்களும் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

திருவாட்டி யாங் என்பவர் ஷின் மின் சீன நாளிதழிடம் காணொளி ஒன்றைக் காட்டினார். காரை ஓட்டிச் சென்றது தமது கணவர் என்றும் வேலைக்குச் செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசலை அவர் சந்தித்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்தார்.

கறுப்பு நிற கார் ஒன்று சாலைத் தடுப்பில் மோதி நிற்பதும் இரு ஆடவர்கள் காவல்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்படுவதும் அந்தக் காணொளியில் பதிவாகி இருந்தது.

சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
விபத்து