18 பெட்டி டுரியான்கள் திருடு போனதாக புகார்

18 பெட்டி டுரியான்கள் திருடு போனதாக புகார்

1 mins read
462d58bd-622f-418a-845a-9d702500b6a7
ஊழியர்கள் உணவு இடைவேளைக்கு வெளியே சென்றபோது டுரியான்கள் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது. - படம்: இன்ஸ்டகிராம் காணொளியிலிருந்து எடுக்கப்பட்டது.
Google News Preferred Icon

ஜூ சியாட்டில் உள்ள ஒரு பழக் கடையிலிருந்து டுரியான் பழங்களைக் கொண்ட 18 பெட்டிகளை ஒருவர் திருடியதாகப் புகார் கூறப்பட்டதை அடுத்து காவல்துறையினர் அதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிசம்பர் 1ஆம் தேதி SgfollowsAll எனும் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் தனிநபர் நடமாட்டச் சாதனத்தில் வந்த ஒருவர், ‘ஷுவர் பாகுஸ்’ பழக் கடைக்கு வெளியே வாகனத்தை நிறுத்தி சிசிடிவி கேமராவைப் பார்ப்பதைக் காண முடிகிறது.

காலை 11.40 மணிக்கு கடை ஊழியர்கள் மதிய உணவுக்கு வெளியே சென்றபோது அந்த ஆடவர் தான் அணிந்திருந்த சட்டையை மாற்றிக்கொண்டு, முகக்கவசத்தோடு வந்து, டுரியான் பெட்டிகளை எடுத்துச் சென்றதாகவும் காணொளி விளக்கக் குறிப்பு கூறுகிறது.

அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பதிவில், விஸ்லி என்ற கடை ஊழியர் திருடன் விரைவில் கண்டுபிடிக்கப்படுவான் என்று நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“என் குடும்பத்தின் சிறு தொழில், 18 பெட்டிகள் டுரியான்களை இழந்தது. கேமராவில் பதிவான திருடன் அவற்றைத் திருடிவிட்டான்,” என்று அவர் கூறினார்.

“இந்த ஆண்டுதான் நாங்கள் தொழில் தொடங்கினோம். அன்றாட வருவாயில் டுரியான்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. அந்த பெட்டிகள் ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்த வாடிக்கையாளர்களுக்கானவை. இது எங்கள் வணிகத்திற்குப் பேரிழப்பு,” என்றார் அந்த ஊழியர்.

அதே நாளில் ஜூ சியாட் ரோட்டில் தவறான முறையில் சொத்தைக் கையாடியது குறித்து தங்களுக்குப் புகார் தரப்பட்டதாகவும் விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்