முதலாளியிடமிருந்து நகைகளைத் திருடிய பணிப்பெண்ணுக்குச் சிறை

2 mins read
6b28ccf1-ff1f-464e-a02a-305bb8ad4c58
படம்: - இணையம்

விலை உயர்ந்த பொருள்கள் உள்ள அலமாரியைச் சுத்தம் செய்வதற்காக அலமாரியின் சாவியை அவ்வீட்டுப் பணிப்பெண்ணிடம் கொடுத்தார் அவரது முதலாளி.

ஆனால், அந்தப் பணிப்பெண்ணோ அதிலிருந்த S$57,000 மதிப்புள்ள தங்கம், வைர நகைகள், ரோலெக்ஸ் கைக்கடிகாரம் முதலிய விலையுயர்ந்த பொருள்களைத் திருடினார். பின்னர் அவற்றை அடகுக் கடையில் அடகு வைத்து அதில் பெற்ற பணத்தை இந்தோனீசியாவில் உள்ள அவரது குடும்பத்துக்கு அனுப்பி வைத்தார்.

சித்தி ஹஸ்துத்தி எனும் அந்த 39 வயது இந்தோனீசிய மாதுக்கு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 21) 15 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

மரின் பரேட்டில் உள்ள கூட்டுரிமை அடுக்குமாடி வீட்டில் வசிக்கும் 43 வயது ஜெர்மானிய ஆடவரின் இல்லப் பணிப்பெண்ணாக சித்தி ஹஸ்துத்தி வேலை செய்தார்.

2022 செப்டம்பருக்கும் 2023 செப்டம்பருக்கும் இடையே, சித்தி தனது முதலாளியின் படுக்கையறையில் உள்ள அலமாரியிலிருந்து 66 விலையுயர்ந்த பொருள்களைத் திருடினார்.

தங்கக் கட்டிகள், தங்கக் கழுத்தணிகள், சுற்றுப்பட்டை இணைப்புகள், தங்க மோதிரங்கள், 4 காரட் வெள்ளை வைரத் தோடுகள், $20,000 மதிப்புள்ள ஒரு ரோலெக்ஸ் கைக்கடிகாரம் ஆகியவை சித்தி திருடிய பொருள்களில் அடங்கும்.

அவற்றை சித்தி 30 முறை அடகுக் கடைகளில் அடகு வைத்து பணம் பெற்றார்.

தனது பொருள்கள் திருடு போயிருப்பதை அறிந்த அந்த முதலாளி அக்டோபர் 1ஆம் தேதி காவல்துறையில் புகார் அளித்தார். அந்த அலமாரிக்கு சாவி உள்ளது என்றும் பொதுவாக பணிப்பெண் அலமாரியைச் சுத்தம் செய்வதற்காக அது பூட்டப்படாமலேயே இருக்கும் என்றும் தெரிவித்தார்.

காவல்துறையின் புலனாய்வில், மொத்தம் 31 அடகுக் கடை ரசீதுகள் சித்தியிடமிருந்து கைப்பற்றப்பட்டன. மேலும், திருடப்பட்ட பொருள்களிலிருந்து $41,000 மதிப்புள்ள பொருள்கள் மீட்கப்பட்டன. எஞ்சியுள்ள பொருள்கள் மீட்கப்படவில்லை.

திருடிய விலையுயர்ந்த பொருள்களை அடகு வைத்து அவற்றிலிருந்து பெற்ற பணத்தை இந்தோனீசியாவில் உள்ள தனது குடும்பத்துக்கு அனுப்பி வைத்ததை சித்தி ஒப்புக்கொண்டார்.

தண்டனை விதிப்பின்போது பேசிய நீதிபதி, தனது முதலாளியின் நம்பிக்கையை சித்தி ஹஸ்துத்தி தவறாகப் பயன்படுத்திக்கொண்டார் என்றும் கைது செய்யப்பட்டவுடன் அவர் தனது குற்றச் செயலை ஒப்புக்கொண்டார் என்றும் இது அவரது முதலாவது குற்றச்செயல் என்றும் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்