எதிர்பாராத தீபாவளிப் பரிசு

எதிர்பாராத தீபாவளிப் பரிசு

2 mins read
f7276c0f-e933-4598-99dc-b48ce353f9cd
தங்கள் குடும்பத்தின் புதுவரவுடன் ரதி ரோஷினி - தியாகு சுப்பிரமணியம் தம்பதி. - படம்: பிரேமா வரதராஜு
Google News Preferred Icon

தீபாவளி நாளன்று எதிர்பாராத வகையில் வாழ்நாள் பரிசாக பெண் குழந்தையை வரவேற்றுள்ளனர் சுவா சூ காங் பகுதியைச் சேர்ந்த ரதி ரோஷினி - தியாகு சுப்பிரமணியம் தம்பதி.

ரதிக்கு நவம்பர் மாத இறுதியில் குழந்தை பிறக்கலாம் என மருத்துவர் தெரிவித்திருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தற்செயலாகப் பரிசோதனைக்கு சென்றார் ரதி.

சில மருத்துவக் காரணங்களுக்காக அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க பரிந்துரைக்கப்பட்டது. சனிக்கிழமை பிறக்க வேண்டிய குழந்தை, ஒருநாள் கழித்து ஞாயிற்றுக்கிழமை, சரியாக தீபாவளியன்று பிறந்து குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

வழக்கம்போல் உற்றார் உறவினரை அழைத்து தீபாவளி விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர் ரதியும் தியாகுவும். ஆனால், இருவரும் மருத்துவமனையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், உறவினர்கள் 14 பேரும் மருத்துவமனையில், தாயையும் குழந்தையையும் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து, தீபாவளியைக் கொண்டாடினர்.

“எங்கள் குடும்பத்தில் தீபாவளியன்று லட்சுமி வழிபாடு செய்வது வழக்கம். அதன் பலனாக அன்றைய நாள் மகாலட்சுமியே வந்து பிறந்திருப்பதாக உணர்கிறேன். அவள் வருகை பல நற்பேறுகளை எங்களுக்கு அளிக்கும் என நம்புகிறோம்,” என்றார் குழந்தையின் தாய்வழிப் பாட்டி திருவாட்டி பிரேமா வரதராஜு, 54

குழந்தையின் தந்தையான ராணுவத்தில் பணியாற்றும் 32 வயது தியாகு, “குடும்பமே மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளது. இவ்வாண்டு தீபாவளிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு இது,” என்றார்.

திங்கட்கிழமை (நவம்பர் 13) தாயும் குழந்தையும் வீட்டுக்கு வந்ததால், தீபாவளிக் கொண்டாட்டத்தின் நீட்சியாக, இவர்களின் முதல் குழந்தை தியாஷினி தியாகு, இருவழித் தாத்தா பாட்டிமார்கள், உறவினர்கள் என அனைவரும் இணைந்து அவர்களை வரவேற்று, விருந்துண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்

குறிப்புச் சொற்கள்