‘பிற நாட்டு அரசியலை சிங்கப்பூருக்குள் கொண்டுவரவேண்டாம்’

‘பிற நாட்டு அரசியலை சிங்கப்பூருக்குள் கொண்டுவரவேண்டாம்’

2 mins read
3a6bbc0d-80c7-46cc-89fa-e98b3f29ef78
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் தொடரும் வேளையில் சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டவருக்கு நினைவூட்டப்படுகிறது. - படம்: இபிஏ
Google News Preferred Icon

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் தொடரும் வேளையில் சிங்கப்பூரைத் தளமாகப் பயன்படுத்திக்கொண்டு தங்களின் அரசியல் ரீதியான இலக்குகளை அடைவதைத் தவிர்க்கவேண்டும் என்று மனிதவள அமைச்சு, சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டவருக்கு நினைவூட்டியுள்ளது.

“இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான போர் பல அப்பாவி பொதுமக்களைப் பலிவாங்கியதுடன் உலகளவில் உணர்வுகளைத் தூண்டியிருக்கிறது.

“பதற்றம் அதிகமாக இருக்கும் வேளையில் நாம் அமைதியாக இருப்பதும் வெளியில் நடக்கும் நிகழ்வுகள் நமது இன, சமய நல்லிணக்கத்தையும் அமைதியையும் பாதிக்காமல் பார்த்துக்கொள்வதும் அவசியமாகிறது,” என்று வியாழக்கிழமையன்று ஃபேஸ்புக்கில் மனிதவள அமைச்சு கூறியது.

வெளிநாட்டு அரசியல் சூழல்களுக்கு ஆதரவளிப்பதையும் அவற்றை சிங்கப்பூருக்குள் கொண்டு வருவதையும் தவிர்க்குமாறு மனிதவள அமைச்சு, உள்துறை அமைச்சு, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ஆகிய மூன்றும் வெளியிட்ட கூட்டு ஆலோசனை அறிக்கையில் சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. சிங்கப்பூரில் வேலை பார்க்கும், வசிக்கும் வெளிநாட்டவருக்கு இது பொருந்தும்.

“தீவிரவாதம், வன்முறை, பயங்கரவாதம் ஆகியவை சார்ந்த எந்தச் செயலையும் சிங்கப்பூர் சகித்துக்கொள்ளாது. அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர்மீது சிங்கப்பூர் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அந்த ஆலோசனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

சர்ச்சை ஏற்படுத்தக்கூடிய இந்த விவகாரத்தின் தொடர்பில் கலந்துபேசும்போது பொறுப்பான, மரியாதையான முறையில் நடந்துகொள்ளுமாறு வெளிநாட்டவருக்கு நினைவூட்டப்படுகிறது. வன்முறையையோ பல்வேறு சமயத்தினருக்கிடையே வெறுப்பைத் தூண்டும் வகையிலோ கருத்துகளை இணையத்திலும் நேரடியாகவும் பகிர்ந்துகொள்ளாமல் இருக்குமாறும் அவர்களுக்கு நினைவூட்டப்படுகிறது.

“சிங்கப்பூர் சட்டத்தின்கீழ் அவ்வாறு செய்வது குற்றமாகும், அதற்குத் தண்டனை விதிக்கப்படலாம். குற்றவாளிகளுக்கு சிங்கப்பூரில் வேலை செய்யத் தடை விதிக்கப்படலாம்,” என்று ஆலோசனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்இஸ்ரேல்ஹமாஸ்