ரிங்கிட்டுக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு புதிய உச்சம்

ரிங்கிட்டுக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு புதிய உச்சம்

2 mins read
151345c8-367d-4928-89c1-cf97bccfa0b2
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 3.2743 என்று இருந்ததாக புளூம்பெர்க் தரவு குறிப்பிட்டது. - படம்: சாவ் பாவ்
Google News Preferred Icon

மலேசிய ரிங்கிட்டுக்கு இணையான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது. ஒரு வெள்ளிக்கு 3.5 ரிங்கிட் என்ற அளவில் திங்கட்கிழமை இரவு 10.21 மணிக்கு மதிப்பு இருந்ததாக புளூம்பெர்க் தரவு தெரிவித்தது.

செவ்வாய்க்கிழமை காலை 9.05 மணி வரை மேலும் கீழும் சற்று ஏறி இறங்கியபோதிலும் சராசரி மதிப்பு கிட்டத்தட்ட 3.5 ரிங்கிட் என்ற அளவிலேயே நீடித்தது.

செவ்வாய்க்கிழமை காலை 9.06 மணிக்கு ரிங்கிட் மதிப்பு 3.4987 என்ற அளவில் சற்று உயர்ந்தாலும் 10.13 மணிக்கு மீண்டும் 3.5ஐ தொட்டது. ஒரு கட்டத்தில் ஒரு சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு 3.5086 ரிங்கிட்டாக பதிவானது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த மதிப்பு 3.2743 என்று இருந்ததாகவும் புளூம்பெர்க் குறிப்பிட்டது.

ரிங்கிட் நிலவரம் குறித்து விஎஸ் மணி சேஞ்சர் என்னும் நாணய வர்த்தக நிறுவனத்தின் இயக்குநர் தாஜுதீன் வஞ்சிலப்பை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கருத்துகளைப் பரிமாறினார்.

“கடந்த ஓரிரு வாரங்களாக சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது.

“ஒவ்வொரு முறை அந்த நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சி காணும்போதும் எங்களது வாடிக்கையாளர்கள் அதனை வாங்கி வருகின்றனர்.

“அதன் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையலாம் என்ற எதிர்பார்ப்பிலும் அவர்கள் ரிங்கிட்டை வாங்குகின்றனர்.

“இருப்பினும் ரிங்கிட்டை வாங்கப் பெருமளவிலான கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. காரணம் அதற்கான தேவை சரியாகவே இருக்கிறது,” என்றார் அவர்.

“விடுமுறைக் காலம் வர இருப்பதால், ரிங்கிட்டின் மதிப்பு குறைந்தாலும் கூடினாலும் சுற்றுப்பயணம் செல்வோரிடையே அந்த நாணயத்துக்கான தேவை தொடர்ந்து நீடிக்கும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
ரிங்கிட்