மோசடிக்குத் துணை: 12 பேர் கைது

மோசடிக்குத் துணை: 12 பேர் கைது

1 mins read
50360004-c271-4f2b-b886-75524b4959df
பிடிபட்ட 12 பேரும் 17 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அக்டோபர் 9 முதல் 20 வரை தீவு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் இவர்கள் சிக்கினர். - படம்: சிங்கப்பூர் காவல்துறை
Google News Preferred Icon

சட்டவிரோத மென்பொருள் மூலம் தொடர்ந்து நடைபெற்ற இணைய வங்கி மோசடிகளுக்குத் துணைபோன சந்தேகத்தின் பேரில் 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவர் பெண்.

பிடிபட்ட அனைவரும் 17க்கும் 40க்கும் இடைப்பட்ட வயதினர். தீவு முழுவதும் இரு வாரங்களாக நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் சிக்கினர்.

அக்டோபர் 9ஆம் தேதி முதல் அக்டோபர் 20ஆம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையில் வர்த்தக விவகாரத் துறை மற்றும் காவல்துறையின் உளவுப் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டனர்.

பணத்துக்காக தங்களது வங்கிக் கணக்குகள், இணைய வங்கி மற்றும் சிங்பாஸ் விவரங்களை அளித்ததன் மூலம் வங்கி மோசடிகளுக்கு வேண்டுமென்றே அவர்கள் துணைபோனது அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது.

மோசடி மென்பொருள் மூலம் ஆண்ட்ராய்ட் கைப்பேசிகளை ஊடுருவி பாதிக்கப்பட்டோரின் வங்கிக் கணக்குகளில் சட்டவிரோதப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது தொடர்பான மோசடிச் சம்பவங்கள் இந்த ஆண்டில் அதிகரித்து வருவதாகக் காவல்துறை தெரிவித்து உள்ளது.

தங்களது வங்கிக் கணக்குகளையும் சிங்பாஸ் விவரங்களையும் தெரிவிக்காதபோதிலும் சமூக ஊடக விளம்பரங்களைப் பயன்படுத்தும்போது மோசடிக்காரர்களின் வலையில் பொதுமக்கள் சிக்குகிறார்கள். துப்புரவு, செல்லப்பிராணி பராமரிப்பு மற்றும் மளிகைச் சாமான்கள் தொடர்பான விளம்பரங்கள் அவை.

சமூக ஊடக விளம்பரங்களைத் தொடர்புகொள்ளும்போது ஆண்ட்ராய்ட் கைப்பேசிக்கான மோசடி மென்பொருளை பதிவிறக்கம் செய்யுமாறு மோசடிக்காரர்கள் கேட்டுக்கொள்வார்கள். அது மோசடி மென்பொருள் என்பது பொதுமக்களுக்கு அப்போது தெரிவதில்லை.

அதன் விளைவாக கைப்பேசியை அவர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சட்டவிரோதப் பரிவர்த்தனையில் ஈடுபடுவார்கள்.

குறிப்புச் சொற்கள்