சட்டவிரோதப் பண விவகாரம்: பெரும் தொகையை நன்கொடையாக வழங்கிய சந்தேக நபர்கள்

சட்டவிரோதப் பண விவகாரம்: பெரும் தொகையை நன்கொடையாக வழங்கிய சந்தேக நபர்கள்

2 mins read
Google News Preferred Icon

கள்ளப் பணம் நல்லப் பணமாக மாற்றப்பட்ட விவகாரத்தில் சிக்கியுள்ள 10 சந்தேக நபர்களில் குறைந்தது ஐவர் கடந்த மூன்று ஆண்டுகளில் பெரும் தொகையை அறநிறுவனங்களுக்கும் சமூக சேவை அமைப்புகளுக்கும் நன்கொடையாக வழங்கியிருக்கின்றனர்.

சிறப்புத் தேவையுடையோருக்கான மூன்று பள்ளிகளை நடத்தும் ரெய்ன்போ நிலையத்துக்கு வழங்கப்பட்ட குறைந்தது 52,000 வெள்ளியும் தேசிய சிறுநீரக அறநிறுவனத்துக்கு வழங்கப்பட்ட குறைந்தது 15,000 வெள்ளியும் அறநிறுவனங்கள், சமூக சேவை அமைப்புகள் ஆகியவற்றுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட தொகையில் அடங்கும். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் விசாரித்ததில் இந்த விவரங்கள் தெரிய வந்தன.

முதியோருக்கு ஆதரவளிக்கும் லயன்ஸ் பிஃபெரண்டர்ஸ் அமைப்பு, சந்தேக நபர்களில் ஒருவரிடமிருந்து 2022ஆம் ஆண்டு 5,000 வெள்ளி பெற்றதாகத் தெரிவித்தது.

கள்ளப் பணத்தை நல்லப் பணமாக்கும் விவகாரத்தில் கைதானவர்களில் சிலர் சிங்கப்பூரில் உள்ள அறநிறுவனங்களுக்கு நன்கொடை அளித்ததாக உள்துறை இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ, செவ்வாய்க்கிழமையன்று நடாளுமன்றத்தில் கூறினார். சம்பந்தப்பட்ட அறநிறுவனங்களில் சில, இது குறித்து காவல்துறையிடம் புகார் செய்ததாகவும் தாங்கள் பெற்ற தொகையைக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று வர்த்தக விவகாரப் பிரிவைச் சேர்ந்த 15 அதிகாரிகள் தங்ளின், புக்கிட் திமா, ஆர்ச்சர்ட் சாலை, ரிவர் வேலி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் இடங்களைச் சோதனையிட்டனர். அதற்கு மறுநாள் ஒன்பது ஆண்கள், ஒரு பெண் ஆகியோர்மீது கள்ளப் பணத்தை நல்லப்பணமாக்குவது போன்றவற்றின் தொடர்பில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இது, சிங்கப்பூர் எதிர்கொள்ளும் ஆக மோசமான கள்ளப் பணத்தை நல்லப் பணமாக்கும் விவகாரம்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்கள்ளப்பணம்நன்கொடைநிதிவர்த்தகம்