எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு உயர்கின்றன

எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு உயர்கின்றன

2 mins read
4f7d16e1-5b91-46a6-94c6-068b50901986
மின்சாரக் கட்டணம் அடுத்த மூன்று மாதங்களுக்கு சராசரியாக 3.7 விழுக்காடு உயரவிருக்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

மின்சாரக் கட்டணம் அடுத்த மூன்று மாதங்களுக்கு சராசரியாக 3.7 விழுக்காடு உயரவிருக்கிறது. பொருள், சேவை வரிக்கு முன்பாக அது ஒரு கிலோவாட்-மணிக்கு 0.98 காசு அதிகரிக்கவுள்ளதாக எஸ்பி குழுமம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

தற்போதைய காலாண்டுடன் ஒப்புநோக்க, அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31ஆம் தேதிவரை குடும்பங்களுக்கான மின்சாரக் கட்டணம் கிலோவாட்-மணிக்கு 27.74 காசிலிருந்து 28.7 காசாக (பொருள், சேவை வரி சேர்க்காமல்) உயரவுள்ளது.

பொருள், சேவை வரியைச் சேர்த்து, அடுத்த காலாண்டுக்கான கட்டணம் கிலோவாட்-மணிக்கு 31 காசாக இருக்கும்.

நாலறை வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிப்போருக்கான சராசரி மாதாந்திர மின்சாரக் கட்டணம் $3.57 அதிகரிக்கும் (பொருள், சேவை வரிக்கு முன்பு) என எஸ்பி குழுமம் தெரிவித்தது.

இதற்கு முந்திய காலாண்டுடன் ஒப்புநோக்க, எரிசக்தி செலவுகள் அதிகரித்து இருப்பதே கட்டண உயர்த்தப்படுவதற்கான காரணம் என்று குழுமம் விளக்கமளித்தது.

நான்கு அம்சங்களின் அடிப்படையில் மின்சாரக் கட்டணம் கணக்கிடப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் எரிவாயு செலவுகளைப் பிரதிபலிக்கும் எரிசக்தி செலவுகள், மின்சக்தி நிலையங்களை இயக்குவதற்கான செலவுகள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.

எரிசக்தி சந்தை ஆணையம் நிர்ணயித்த வழிகாட்டிகளின் அடிப்படையில், காலாண்டுக்கு ஒருமுறை மின்சாரக் கட்டணங்களை தான் மறுஆய்வு செய்வதாக எஸ்பி குழுமம் கூறியது.

இதற்கிடையே, அடுத்த மூன்று மாதங்களுக்கு குடும்பங்களுக்கான எரிவாயுக் கட்டணம் கிலோவாட்-மணிக்கு 0.51 காசு உயரும் (பொருள், சேவை வரிக்கு முன்பு) என சிட்டி எனர்ஜி நிறுவனம் தெரிவித்தது.

பொருள், சேவை வரியைச் சேர்க்காமல், எரிவாயுக் கட்டணம் கிலோவாட்-மணிக்கு 21.91 காசிலிருந்து 22.42 காசாக உயரும்.

பொருள், சேவை வரியைச் சேர்த்து, கட்டணம் கிலோவாட்-மணிக்கு 24.21 காசாக இருக்கும்.

இதற்கு முந்திய காலாண்டுடன் ஒப்புநோக்க, எரிபொருள் விலை அதிகரித்து இருப்பதே எரிவாயுக் கட்டணம் உயர்த்தப்படுவதற்கான காரணம் என சிட்டி எனர்ஜி விளக்கமளித்தது.

எரிவாயுத் துறையை ஒழுங்குபடுத்தும் எரிசக்தி சந்தை ஆணையம், எரிவாயுக் கட்டணம் சரிசெய்யப்படுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
கட்டணம்மின்சாரம்எரிவாயுஅதிகரிப்பு