அங் மோ கியோவில் புதுப்பொலிவு பெற்ற மரபுடைமைப் பாதை

2 mins read
f1932628-7df1-40ab-a00b-d6fbe14706b2
புதுப்பொலிவு பெற்றுள்ள அங் மோ கியோ மரபுடைமைப் பாதையில் புளோக் 159ல் உள்ள கெபுன் பாரு பறவைக் காட்சியகம் இடம்பெறுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசிய மரபுடைமைக் கழகத்தின் அங் மோ கியோ மரபுடைமைப் பாதை 2011ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அந்த வட்டாரத்தின் வரலாற்றையும் மரபுடைமையையும் எடுத்துக்கூறும் புதிய கதைகளுடன் இன்று அது புதுப்பொலிவுடன் திகழ்கிறது.

மரபுடைமைப் பாதையில் 40 இடங்கள் அடங்கும். அவற்றில் 13 புதிதாகச் சேர்க்கப்பட்டவை.

அங் மோ கியோ வட்டாரத்தின் மரபுடைமையின் வெவ்வேறு அம்சங்களை ஆராயும் மூன்று வழிகளும் இந்தப் பாதையில் இடம்பெறுகின்றன. மக்கள் சுய-வழிகாட்டிகளாக இந்த மூன்று வழிகளை அணுகலாம்.

சிங்கப்பூரின் ஆகப் பெரிய வட்டார மையங்களில் 1970களின் பிற்பாதியில் முழுமையடைந்த அங் மோ கியோ வட்டார மையமும் ஒன்று.

சிங்கப்பூரின் பொது வீடமைப்புத் திட்டங்களின் வெற்றியாகத் திகழும் அங் மோ கியோ வட்டாரம், 1980களிலும் 1990களிலும் சிங்கப்பூருக்கு வருகை தந்த முக்கியப் பிரமுகர்களுக்குச் சுற்றிக் காண்பிக்கப்பட்டது.

‘விஐபி’ புளோக் என்றழைக்கப்படும் புளோக் 710ல் அங் மோ கியோ வட்டார மையத்தைக் காண இயலும்.
‘விஐபி’ புளோக் என்றழைக்கப்படும் புளோக் 710ல் அங் மோ கியோ வட்டார மையத்தைக் காண இயலும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதிலும் குறிப்பாக, வட்டார மையத்தில் உள்ள புளோக் 710, ‘விஐபி’ புளோக் என்று அறியப்படுகிறது. மறைந்த இரண்டாம் எலிசபெத் ராணி, முன்னாள் சீனப் பிரதமர் லீ பெங் ஆகியோர் இந்தக் கட்டடத்திலிருந்து அங் மோ கியோவைப் பரந்தளவில் கண்டு ரசித்தனர்.

அங் மோ கியோ நகர மன்றமும் பெருமைக்குரிய ஓர் அம்சம். 1986ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் முதல் நகர மன்றமாக அது செயல்படத் தொடங்கியது.

குருவி வளர்க்கும் ஆர்வலர்கள் தங்களின் கூண்டுகளை மாட்ட 1987ஆம் ஆண்டில் கம்பங்கள் அமைக்கப்பட்ட நிலையில் இன்று 1,000 கூண்டுகளைக் கொள்ளும் இட வசதி அங் மோ கியோ கார்டன் வெஸ்ட் பகுதியில் உள்ளன.

இவ்வாறு பலதரப்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ள அங் மோ கியோ மரபுடைமைப் பாதைக்கான வழிகாட்டியும் வரைபடமும் நான்கு அதிகாரத்துவ மொழிகளில் உள்ளன. இதை தேசிய மரபுடைமைக் கழகத்தின் மரபுடைமை இணையவாசலான Roots.gov.sg என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்