மொரோக்கோ பயணத்தைத் தவிர்க்க சிங்கப்பூரர்களுக்கு வலியுறுத்து

1 mins read
8e8969bb-8030-405b-b850-f241fb1bcbe5
மொரோக்கோவில் உள்ள சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்குமாறு சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டு உள்ளது. - படம்: ஏஎஃப்பி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மொரோக்கோவில் உள்ள இடங்களுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று சிங்கப்பூரர்களுக்கு சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு ஆலோசனை தெரிவித்து உள்ளது.

குறிப்பாக, பாதிப்புக்கு உள்ளான மராகேஷ், அல் ஹாவுஸ், அவுர்ஸாஸேட், அஸிலால், சிசாவுவா மற்றும் டாரவ்டன்ட் போன்ற இடங்களுக்கு அவசியமின்றி செல்ல வேண்டாம் என அமைச்சு செவ்வாய்க்கிழமை தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

தற்போது மொரோக்கோ நகரங்களில் இருக்கும் சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

சேதமடைந்த கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளில் இருந்து பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் சாத்தியம் இருப்பதாலும் அதிர்வுகளுக்கு வாய்ப்பு இருப்பதாலும் அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அமைச்சு வலியுறுத்தி உள்ளது.

“அன்புகூர்ந்து விழிப்புடன் இருங்கள். நிலைமையை அணுக்கமாகக் கண்காணியுங்கள். உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனைகளைக் கேளுங்கள். அவசியம் ஏற்படின் பாதுகாப்பான இடங்களுக்கு, இயன்ற வரை சீக்கிரமாகச் செல்லுங்கள்,” என்று அமைச்சு தெரிவித்து உள்ளது.

மொரோக்கோவில் உள்ள சிங்கப்பூரர்கள் https://eregister.mfa.gov.sg என்னும் வெளியுறவு அமைச்சின் இணையத்தளத்தில் பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். அவ்வாறு பதிவு செய்துகொள்வதன் மூலம் அவர்களை அதிகாரிகள் எளிதில் தொடர்புகொள்ள இயலும்.

தூதரக உதவி தேவைப்படுவோர் காசாபிளாங்கா நகரில் உள்ள சிங்கப்பூரின் தூதரக அலுவலகத்தை நாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். மேலும், வெளியுறவு அமைச்சின் 24 மணிநேர அலுவலகத்துடனும் அவர்கள் தொடர்புகொள்ள இயலும். தொடர்பு விவரங்களை அமைச்சின் இணையப்பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்