மக்கள் பேராதரவுடன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற திரு தர்மனுக்கு பிரதமர் வாழ்த்து

மக்கள் பேராதரவுடன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற திரு தர்மனுக்கு பிரதமர் வாழ்த்து

2 mins read
263aa564-67b3-4d1d-8f78-47baa369a788
தாமான் ஜூரோங் உணவங்காடி நிலையத்தில் மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த திரு தர்மன் சண்முகரத்னம், அவரது மனைவி ஜேன் இட்டோகி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரர்களின் பேராதரவுடன் திரு தர்மன் சண்முகரத்னம் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று பிரதமர் லீ சியன் லூங் நேற்று வெளியிட்ட தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மூத்த அமைச்சரான திரு தர்மன், மக்களின் தீர்க்கமான முடிவுடன் 70.4 விழுக்காடு வாக்குகளைப் பெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பொதுச் சேவையில் தனிச்சிறப்புமிக்க சாதனைகளைப் புரிந்துள்ள அவர், அதிபர் என்ற முறையில் தமது கடமைகளை சிறப்புடன் ஆற்றுவார் என்பதில் தமக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்றார் திரு லீ.

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற திரு தர்மனுக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு அரசாங்கம் அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

“திரு தர்மனும் அரசாங்கத்துடன் நெருக்கமாகச் செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார். நாட்டின் தலைவராக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிங்கப்பூரை அவர் பிரதிநிதிக்கவிருக்கிறார். நாட்டின் சேமிப்பை பாதுகாப்பது உட்பட உயர் நியமனங்களில் அவர் தமது சம்பிரதாய அதிகாரங்களைப் பயன்படுத்துவார்,” என்று பிரதமர் தெரிவித்தார்.

அதிபர் தேர்தலில் போட்டியிட முன்வந்த மூன்று வேட்பாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

“அடுத்த அதிபருக்கு வாக்களிக்கும் உரிமையை சிங்கப்பூரர்கள் பயன்படுத்த முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தத் தேர்தலில் வாக்காளர்களும் வேட்பாளர்களும் அதிபரின் கடமைகளையும் ஆற்ற வேண்டிய பங்கையும் புரிந்து செயல்பட்டுள்ளனர். இது சிங்கப்பூருக்கு நல்லது,” எனறு திரு லீ கூறினார்.

அதிபர் தேர்தலில் தம்முடன் போட்டியிட்ட 15.72 வாக்குகளைப் பெற்ற இங் கொக் சொங், 13.88 வாக்குகளைப் பெற்ற டான் கியன் லியான் ஆகிய இருவரையும் வென்று திரு தர்மன் அதிபராகியுள்ளார்.

“நாட்டின் தலைவர் என்ற முறையில் அனைத்து சிங்கப்பூரர்களையும் ஒருங்கிணைக்கும் நபராக அதிபர் இருக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அவர் தனது பாதுகாப்பு அதிகாரங்களை சமயோசிதமாகப் பயன்படுத்த வேண்டும். தமது அனுபவங்களுடன் அவர் சுதந்திரமான முடிவுகளை எடுக்க வேண்டும்,” என்று திரு லீ கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்