டாக்சி-பந்தய கார் விபத்து; டாக்சி ஓட்டுநர் மருத்துவமனையில்

1 mins read
49a3db01-3477-4805-9c29-07f6f068640e
மரினா கரையோர விரைவுச்சாலையை நோக்கிச்செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் விபத்து நிகழ்ந்தது. - படம்: டெலிகிராம்

ஆயர் ராஜா விரைவுச்சாலையில் சனிக்கிழமை காலை பந்தய கார் ஒன்றும் டாக்சி ஒன்றும் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து டாக்சி ஓட்டுநர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மரினா கரையோர விரைவுச்சாலையை நோக்கிச்செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் நிகழ்ந்த விபத்து குறித்து காலை 9.20 மணியளவில் தனக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது.

இணையத்தில் வலம் வந்த அரை நிமிடக் காணொளியில், காரின் சக்கரம் உள்ளிட்ட வாகனச் சிதைவுகள் சாலையின் நான்கு தடங்களில் சிதறிக் கிடந்தது தெரிந்தது.

ராஃபிள்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது 56 வயது டாக்சி ஓட்டுநர் சுயநினைவுடன் இருந்தார்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட மறுத்துவிட்ட 41 வயது ஆண் கார் ஓட்டுநர், காவல்துறை விசாரணைக்கு உதவி வருகிறார்.

முன்னதாக, மற்றொரு விபத்து குறித்து சனிக்கிழமை காலை 9.10 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் வந்தது. டாக்சி-பந்தய கார் விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து 5 கி.மீ. தூரத்தில் அந்த விபத்து நிகழ்ந்தது. ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயை நோக்கிச்செல்லும் ஷியர்ஸ் அவென்யூவில் சறுக்கி கார் ஒன்று விபத்துக்குள்ளானது.

ராஃபிள்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது 55 வயது ஆண் கார் ஓட்டுநரும் 53 வயது பெண் பயணியும் சுயநினைவுடன் இருந்தனர். காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
விபத்துடாக்சி