எனக்கு வலுவான ஆதரவு அளியுங்கள்: டான் கின் லியான்

எனக்கு வலுவான ஆதரவு அளியுங்கள்: டான் கின் லியான்

2 mins read
3ed7dbef-f6c4-48e2-ad8d-164592621c37
தாம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் நேர்மையாகவும் விடாமுயற்சியுடனுடனும் பணியாற்ற திரு டான் கின் லியான் உறுதி கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஆளும் தரப்பைச் சாராத ஒருவரை அதிபராகத் தேர்ந்தெடுக்க சிங்கப்பூரர்களுக்கு வாய்ப்பளிக்கவே தாம் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக வேட்பாளர்களில் ஒருவரான திரு டான் கியன் லியான், 75, கூறியிருக்கிறார்.

வருங்காலச் சவால்களைச் சமாளிப்பதில் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படும் வேளையில் சுயேச்சையான கண்ணோட்டத்துடன் செயல்பட, வாக்காளர்கள் தமக்கு வலுவான ஆதரவு தரவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற முதல் பிரசார ஒலிபரப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

‘என்டியுசி இன்கம்’ நிறுவனத்தின் முன்னாள் தலைவரான அவர் ஆங்கிலம், மாண்டரின், மலாய் ஆகிய மூன்று மொழிகளில் உரையாற்றினார்.

தாம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் நேர்மையாகவும் விடாமுயற்சியுடனுடனும் பணியாற்ற அவர் உறுதியளித்தார்.

சிங்கப்பூரின் அரசமைப்புச் சட்டத்தின்கீழ், நாட்டின் கையிருப்பைப் பாதுகாப்பதும் பொதுச் சேவைத் துறையின் நேர்மையைக் கட்டிக்காப்பதும் அதிபரின் இரு முக்கியக் கடமைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.

தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால், அரசாங்கத்திற்கு எதிரியாகச் செயல்படுவது தமது நோக்கம் அல்ல எனத் திரு டான் வலியுறுத்தினார். மாறாக, தமது கடமைகளை நிறைவேற்றும்போது அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற அவர் உறுதி கூறினார்.

நாட்டின் கையிருப்பை நீண்டகால அடிப்படையில் லாபகரமான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்ட அவர், விவேகமான முறையில் முதலீடு செய்யப்படுவதை உறுதிசெய்வேன் என்றார்.

முதலீடுகள் மட்டுமன்றி தற்போதைய, வருங்காலத் தலைமுறைகளின் நலனுக்காக அந்த நிதியைப் பயன்படுத்தவும் திரு டான் உறுதியளித்தார்.

பொதுச் சேவைத் துறையின் உயர் பதவிகளில் தகுதியானவர்களை அமர்த்துவது முக்கியம் என்றார் அவர்.

சிங்கப்பூரர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டிருந்த ஒற்றுமை உணர்வையும் பெருமையையும் மீட்டெடுப்பது தமது இலக்கு என்றார் திரு டான். ஒன்றுபட்டு, இணக்கத்துடன் வாழும் மக்களைக் கொண்ட சிங்கப்பூரை உருவாக்கத் தாம் விரும்புவதாக அவர் சொன்னார்.

சிங்கப்பூரர்களின் சிரமங்களையும் கனவுகளையும் தாம் அறிந்திருப்பதாகக் கூறிய அவர் சாதாரண மக்களுடன் தொடர்பில் இருக்க உறுதியளித்தார். அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் தமது கடமைகளை நிறைவேற்ற அது உதவும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்