‘அழகான இளம்பெண்கள்’: விமர்சனத்திற்கு டான் கின் லியன் விளக்கம், பதிலடி

2 mins read
8d8cb00a-ca18-45db-8397-70c67a89e87a
வெஸ்ட் கோஸ்ட் சந்தைச் சதுக்கப் பகுதியில் ஆதரவு திரட்டிய திரு டான் கின் லியன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தமது ஃபேஸ்புக் பதிவுகளில் ‘அழகான இளம்பெண்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளது சிலருக்கு மட்டுமே அசௌகரியத்தை ஏற்படுத்தலாம் என்று கூறி, விமர்சனங்களுக்குத் திரு டான் கின் லியன் பதிலடி கொடுத்துள்ளார்.

அத்தகைய பல பதிவுகள் தொகுக்கப்பட்டு வெளியான டிக்டாக் காணொளி ஒன்று கடந்த வாரம் பரவலானது. திங்கட்கிழமை மாலைவரை அக்காணொளி 225,000க்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுவிட்டது.

என்டியுசி இன்கம் முன்னாள் தலைமை நிர்வாகியான திரு டான், தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அவ்வப்போது ‘அழகான இளம்பெண்கள்’, ‘அழகான மெல்லுடல் இளம்பெண்கள்’, ‘அழகான மெதுவோட்ட இளம்பெண்கள்’ என்று குறிப்பிட்டதுண்டு. அத்தகைய பதிவுகள் கடந்த 2022ஆம் ஆண்டில் குறைந்தது 18ம் இவ்வாண்டுத் தொடக்கத்தில் குறைந்தது ஐந்தும் வெளியாகின.

இந்நிலையில், அத்தகைய பதிவுகளைக் கண்ட பலரும் அவற்றை மேம்போக்காகவும் மகிழ்வானதாகவும் எடுத்துக்கொள்வதாகத் திரு டான் கூறியுள்ளார்.

வெஸ்ட் கோஸ்ட் சந்தைச் சதுக்கத்தில் திங்கட்கிழமை நடைப்பயணத்தில் ஈடுபட்டிருந்தபோது செய்தியாளர்களிடம் இவ்வாறு அவர் சொன்னார்.

“சிலருக்கு மட்டுமே அது அசௌகரியமாக இருக்கும். அவர்கள் ஒரு சிறு எண்ணிக்கைதான். பெரும்பாலோர் அதனை வேடிக்கையாகவே எடுத்துக்கொள்வர்,” என்றார் திரு டான்.

அத்தகைய பதிவுகள் வழியாகவே தாம் இணையத்தில் பலரை ஈர்க்க முயல்வதாக அவர் குறிப்பிட்டார்.

தம்முடைய உணவுமுறைகள் போன்ற வேறு பல பதிவுகளும் உள்ளதாகக் கூறிய அவர், அத்தகைய எளிய பதிவுகள் 100,000 பேரை, அரை மில்லியன் பேரை ஈர்க்கலாம் என்றும் திரு டான் சொன்னார்.

‘ரெடிட்’ இணையத்தளத்தில் திரு டானின் இத்தகைய வண்ண பதிவுகளுக்குக் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து 1,600க்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதே வேளையில், அதிபர் தேர்தலில் போட்டியிட திரு டான் தகுதியானவர் என்பதை அதிபர் தேர்தல் குழு எவ்வாறு முடிவு செய்தது என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனிடையே, மாதர் செயலாய்வுச் சங்கமும் (அவேர்) திரு டான் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தகுதிபெற்றது குறித்த பொதுமக்களின் அக்கறைகளைப் பகிர்ந்துகொண்டுள்ளது.

இந்நிலையில், தமது பதிவுகளை வெறுப்போரும் அருவருக்கத்தக்க கருத்துகளைப் பதிவிடுவோரும் தமது ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து விலகியிருக்குமாறு திரு டான் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்