முன்மொழிபவர், வழிமொழிபவர், இணக்கம் தெரிவிப்பவர்களை அறிவித்தார் இங் கோக் சோங்

2 mins read
1e49825f-907f-4bb1-bdcf-79a68e014b02
அதிபர் தேர்தலில் போட்டியிட கடந்த வெள்ளிக்கிழமை திரு இங் கோக் சோங் தகுதிச் சான்றிதழைப் பெற்றார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதிபராக விரும்பும் இங் கோக் சோங், 75, தேர்தலில் போட்டியிடுமாறு தம்மை முன்மொழிபவரையும் அதை ஆமோதிப்பவரையும் உறுதிப்படுத்தும் எட்டுப் பேரையும் திங்கட்கிழமை அறிமுகப்படுத்தினார். 2017 அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பிய திரு முகம்மது சாலே மரைக்கானும் அந்த எட்டுப் பேரில் ஒருவர்.

வேட்புமனுத் தாக்கல் தினத்துக்கு முந்தைய நாளான திங்கட்கிழமை, தம்மை முன்மொழிபவர் திரு குவா வீ கீ என்று அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் (ஜிஐசி) முன்னாள் தலைமை முதலீட்டு அதிகாரியான திரு இங் தெரிவித்தார். ‘அவாண்டா இன்வெஸ்ட்மண்ட் மேனேஜ்மண்ட்’ எனும் அனைத்துலக சொத்து மேலாண்மை நிறுவனத்தை திரு இங்குடன் சேர்ந்து நிறுவியவர் திரு குவா.

ஜிஐசியின் பொதுச் சந்தை முன்னாள் தலைவருமான திரு குவா, ஓசிபிசி வங்கி, சிங்கப்பூர் வங்கியின் இயக்குநர் சபைகளிலும் இடம்பெற்றுள்ளார்.

திரு இங்கை வழிமொழிபவர் முதுமை நோய் மருத்துவரான டாக்டர் கேரல் டான். தி குட் லைஃப் மெடிக்கல் சென்டரில் அவர் மருத்துவராகப் பணியாற்றுகிறார்.

நீதித்துறை அதிகாரி அமீரலி அப்தலி, ஃபுலர்ட்டன் நிதி மேலாண்மை தலைவர் ஹோ தியென் யீ, மான்ஃபர்ட் பள்ளி நிர்வாகக் குழுவின் முன்னாள் தலைவர் சுவா செர் சூன், செகண்ட் சான்ஸ் பிராப்பர்ட்டிஸ் நிறுவனரும் அதன் தலைமை நிர்வாகியுமான முகம்மது சாலே மரைக்கான், கொடைவள்ளல் மார்கரட் சான், முஸ்லிம் நிபுணர்கள் சங்கத்தின் தோற்றுவிப்பு உறுப்பினர் அப்துல் ஹமீது அப்துல்லா, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர் ஜியோ ஹான்ஸ், டிபி ஆர்க்கிடெக்ஸ் தலைவர் ஏஞ்சலின் சான் ஆகியோர் திரு இங்கிற்கு இணக்கம் தெரிவிக்கும் அந்த எண்மர்.

முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னமும் என்டியுசி இன்கம் முன்னாள் தலைவர் டான் கின் லியன்னும் தகுதிச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர். அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்