வரவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட தாம் தகுதிபெற்றதால் திரு இங் கோக் சோங், 75, நிம்மதி அடைந்துள்ளார்.
“சற்று உறுதியில்லா நிலை இருந்ததால் அந்த அறிவிப்பு வெளியானதும் நான் நிம்மதியடைந்தேன். சிங்கப்பூர் அதிபராக நாட்டு மக்களுக்குச் சேவையாற்றுவதற்கான எனது அடுத்த கட்டப் பயணத்தை இப்போது நான் மேற்கொள்ளலாம்,” என்றார் திரு இங்.
‘ஸைரப் மீடியா’ ஊடக நிலையத்தில் வலையொலிப் பதிவை முடித்தபின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் அவர் பேசினார்.
தேர்தல் துறை வெள்ளிக்கிழமை காலை அனுப்பிய மின்னஞ்சல் குறித்து தாம் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் சிபில் லாவ், 45, தம்மிடம் தெரிவித்ததாக அவர் கூறினார்.
அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் (ஜிஐசி) முன்னாள் தலைமை முதலீட்டு அதிகாரியான திரு இங், பொதுச் சேவைத் துறையில் பணியாற்றியதன் அடிப்படையில் தகுதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்தார்.
செப்டம்பர் 1ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், தன்னைப்பற்றி அதிகமான சிங்கப்பூரர்கள் தெரிந்துகொள்ள விரும்புவதாக திரு இங் சொன்னார்.
“ஈரச்சந்தைகள், உணவங்காடி நிலையங்கள், கடைத்தொகுதிகள் ஆகிய இடங்களுக்குச் செல்வேன். அதன்மூலம் சிங்கப்பூர் மக்கள் என்னைப் பற்றி அறிந்துகொள்வர். அதற்கே இப்போது மிக்க முன்னுரிமை அளிக்கவுள்ளேன். நான் எப்போதும் எந்த ஓர் அரசியல் கட்சியையும் சாராதவன். அதனால், கட்சி சாராத சுயேச்சை நான். திரு டான் கின் லியன் முன்னர் மக்கள் செயல் கட்சியில் இருந்தார்,” என்றார் திரு இங்.
தான் தேர்தலில் வென்றால் போதும், எத்தனை விழுக்காடு வாக்குகள் கிடைக்கின்றன என்பது ஒரு பொருட்டன்று என்றும் அவர் குறிப்பிட்டார்.

