பிரசாரத்திற்குத் தயாராக கூடுதல் நேரம்: டான் கின் லியன் மகிழ்ச்சி

3 mins read
0329e1ff-c849-4fc3-9cc0-57880b7c213f
அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிச் சான்றிதழுடன் திரு டான் கின் லியன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதிபர் தேர்தல் குழுவின் முடிவு முன்னதாகவே வெளியானதால் பிரசாரத்திற்கு ஆயத்தமாக கூடுதல் நேரம் கிடைத்துள்ளதாக என்டியுசி இன்கம் முன்னாள் தலைமை நிர்வாகி டான் கின் லியன், 75, மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், 66, அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் (ஜிஐசி) முன்னாள் தலைமை முதலீட்டு அதிகாரி இங் கோக் சோங், 75, திரு டான் ஆகிய மூவருக்கும் அதிபர் தேர்தல் குழு தகுதிச் சான்றிதழ் வழங்கியுள்ளது. தொழில் முனைவர் ஜார்ஜ் கோ, 63, அதிபர் தேர்தலில் போட்டியிடத் தகுதிபெறவில்லை.

இந்நிலையில், அதிபர் தேர்தல் குழுவின் முடிவு எதிர்பாராதது என்றும் அது தமக்கு வியப்பளிக்கிறது என்றும் திரு டான் குறிப்பிட்டார்.

இது, சிங்கப்பூரர்களின் வாக்குகளை வெல்வதற்கான தமது பிரசாரத்திற்கு மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது என்று அவர் கூறினார்.

“அரசாங்கம் சாராத ஒரே வேட்பாளர் நான்தான் என்பது இப்போது மேலும் உறுதியாகிவிட்டது. அதனால் பிரசாரத்திற்குத் தயாராவது எனக்கு எளிதாகிவிட்டது. சிங்கப்பூர் மக்களிடம் நான் கொண்டுசேர்க்க வேண்டிய செய்தியில் கவனம் செலுத்துவேன்,” என்றார் திரு டான்.

விலைவாசியைக் குறைப்பது, கட்டுப்படியான விலையில் வீடுகள் கிடைப்பது, வேலைவாய்ப்பு ஆகியவை தொடர்பில் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற அதிபர் பதவியைப் பயன்படுத்திக்கொள்வேன் என்பது தமது பிரசாரத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று அவர் மீண்டும் வலியுறுத்திக் கூறினார்.

தங்கள் வாழ்க்கையில் இன்னும் 50 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்தைக் கொண்டுள்ள இளைய தலைமுறையின் தேவைகளில் மிகுந்த கவனம் செலுத்துவேன் என்றும் அவர் சொன்னார்.

“சிங்கப்பூரில் குடும்ப வாழ்வை மேற்கொள்ளலாம் என்ற நம்பிக்கையை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். அதற்கு என்னால் முடிந்த அளவு பாடுபடுவேன்,” என்றார் திரு டான்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை காலை கோவன் பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்ட திரு டான், திரு தர்மனுடன் நேரடிப் போட்டி நிலவினால், 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்குகளை அறுவடை செய்ய இலக்கு வகுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

அதே வேளையில், மற்ற வேட்பாளர்களைவிட அதிக வாக்குகள் கிடைத்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் என்றும் அவர் சொன்னார்.

கட்சி சாராத அதிபர் என்பதை முன்னிறுத்தும் திரு டான், தமது பிரசாரக் குழுவில் திரு லிம் தியெனையும் திரு பிரபு ராமச்சந்திரனையும் இணைத்துக்கொள்வாரா என்று கேட்கப்பட்டது.

மக்கள் குரல் கட்சியைத் தொடங்கிய திரு லிம், திரு டானை வழிமொழிகிறார். அக்கட்சி சார்பில் 2020 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட திரு பிரபு, திரு டானின் முதன்மைத் தேர்தல் முகவராக இருக்கிறார்.

அதற்குப் பதிலளிக்கையில், கட்சி சாராத தொண்டூழியர்கள் பலர் தம்முடன் இருப்பதாகவும் அடித்தளத்தில் தம்மால் முடிந்த அளவு ஆதரவு திரட்ட முயல்வதாகவும் திரு டான் கூறினார்.

“எனது கண்ணோட்டங்கள் அரசியல் சாராதவை; மக்கள் பிரச்சினைகளுக்குச் சிறந்த தீர்வுகள் காண்பதை நோக்கமாகக் கொண்டவை,” என்றார் அவர்.

தான் ஓர் எதிர்க்கட்சி வேட்பாளர் கிடையாது என்ற அவர், ஆயினும் நடுநிலைமையுடன் இருப்பவர்கள் அல்லது எதிர்க்கட்சி பக்கம் சாய்பவர்களின் வாக்குகள் தனக்குக் கிடைக்கும் என்று நம்புவதாகச் சொன்னார்.

அதிபர் தேர்தலில் போட்டியிட திரு ஜார்ஜ் கோ தகுதிபெறாதது தமக்கு ஏமாற்றமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்