சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் 55வது ஆண்டு நிறைவை முன்னிட்டு செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் பாய லேபார் ஆகாயப் படைத்தளத்தில் பொது வரவேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது. ஏழாண்டுகளில் நடத்தப்படும் முதல் பொது வரவேற்பு நிகழ்வாக இது அமையும்.
‘ஏ330 எம்ஆர்டிடி’ விமானம், ‘சிஎச்-47எஸ்டி சினூக்’ ஹெலிகாப்டர், ‘சி130’ போக்குவரத்து விமானம், ‘ஃபோக்கர் 50’ விமானம் உள்ளிட்டவை இந்த நிகழ்ச்சியில் அங்கம் வகிக்கின்றன.
சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் சமூக வலைத்தளங்களில் கிடைக்கப்பெறும் ‘ஃபார்ம்எஸ்ஜி’ குலுக்கல் முறையில் மொத்தம் 2,500 நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன. ஆகஸ்ட் 22ஆம் தேதி நண்பகல் வரை குலுக்கல் முறை இடம்பெறும்.
இந்நிலையில், எம்ஆர்டிடி விமானத்தில் பயணம் செய்ய சாங்கி ஆகாயப் படைத்தளத்திற்கு ஊடகவியலாளர்கள் திங்கட்கிழமை அழைக்கப்பட்டனர்.
நுழைவுச்சீட்டுகளைப் பெறுவோர், பாய லேபார் ஆகாயப் படைத்தளத்தில் நடைபெறும் பொது வரவேற்பு நிகழ்வில் அந்த விமானத்தில் ஏறி பயணம் செய்வதற்கான வாய்ப்பு காத்திருக்கிறது.
பொதுமக்கள் நான்கு நுழைவுச்சீட்டுகள் வரை விண்ணப்பிக்கலாம். ஆனால் குலுக்கலில் பங்கெடுக்க அவர்களுக்கு ஒரேயொரு வாய்ப்பு மட்டுமே கிடைக்கும். செல்லுபடியாகும் அனைத்து விண்ணப்பங்களும் மின்னணு குலுக்கல் முறைக்கு உட்படுத்தப்படும். நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான தேதி, நேரம், விமான வகை யதேச்சையாக ஒதுக்கப்படும்.
குலுக்கல் முடிவுகள் ஆகஸ்ட் இறுதியில் அறிவிக்கப்படும்.

