முன்பதிவு மோசடி: $27,000 இழந்த உணவங்காடிக்காரர்

முன்பதிவு மோசடி: $27,000 இழந்த உணவங்காடிக்காரர்

2 mins read
d001d87b-af13-4849-98c6-e2fd33f63e80
உணவுக் கடைக்காரர் டேவிட் ரெத்னசாமிக்கு $27,000 இழப்பு ஏற்பட்டுள்ளது - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

அங் மோ கியோவில் உள்ள உணவங்காடிக் கடைக்காரரிடம் ஏமாற்றுப் பேர்வழி ஒருவர் விருந்து மேசைகளை முன்பதிவு செய்து பின்னர் வராததால் கடைக்காரருக்கு $27,000 இழப்பு ஏற்பட்டுள்ளது.

‘மிஸ்டர் பிளெக்கி சீஃபுட்’ உணவகத்தின் உரிமையாளரும் சமையற்கலை வல்லுநருமான திரு டேவிட் ரெத்னசாமி அதுகுறித்துக் காவல்துறையிடம் புகாரளித்திருப்பதாகக் கூறினார்.

சனிக்கிழமை இரவு தன்னை ஃபூச்சுன் தொடக்கப்பள்ளி ஆசிரியர் என்று அறிமுகம் செய்துகொண்ட ஒருவர் ‘வாட்ஸ்அப்’ மூலம் தகவல் அனுப்பியதாகவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை என இரு இரவுகளுக்கு, தலா ஒன்பது மேசைகளுக்கு அவர் முன்பதிவு செய்ததாகவும் திரு ரெத்னசாமி சொன்னார்.

ஆசிரியர்களுக்கும் கல்வி அமைச்சின் ஊழியர்களுக்கும் அங்கு இரண்டு நாள் இரவு விருந்து தரப் பள்ளி திட்டமிடுவதாக அந்த ஆடவர் கூறியதாக ரெத்னசாமி குறிப்பிட்டார்.

பள்ளி முதல்வர் குறிப்பிட்ட சில வகை மதுபானங்களைப் பரிமாற விரும்புவதாகவும் அதைத் தான் குறிப்பிடும் விநியோகிப்பாளரிடம் வாங்கும்படியும் ஆடவர் குறிப்பிட்டார். அதற்கு ஒப்புக்கொண்டு 30 போத்தல் மதுபானங்களுக்கு $2,500ஐ விநியோகிப்பாளரின் வங்கிக் கணக்கிற்கு ரெத்னசாமி அனுப்பினார்.

பின்னர் விருந்தினர் எண்ணிக்கை கூடுவதாகக் கூறி மதுபான போத்தல்களின் எண்ணிக்கையை ஆடவர் உயர்த்தக் கோரினார். வாடிக்கையாளரைத் திருப்திப்படுத்தும் எண்ணத்தில், கிட்டத்தட்ட $18,000க்கு மதுபானங்களை வாங்க நேரிட்டதாக ரெத்னசாமி கூறினார்.

பின்னர் விருந்து உணவைத் தயாரிக்க நண்டு, கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றை வாங்க மேலும் $9,000 செலவானதாக ரெத்னசாமி குறிப்பிட்டார்.

ஏமாற்றுப் பேர்வழி $14,795 தொகையைச் செலுத்தியதாக போலியான ‘பேநவ்’ ரசீதைத் தனக்கு அனுப்பியதாகவும் அவர் கூறினார்.

மதுபானத்திற்காக அவர் செலுத்திய பணம் சந்தேகத்திற்குரிய வங்கிக் கணக்குக்குச் செலுத்தப்பட்டதாக காவல்துறையின் மோசடித் தடுப்பு நிலையத்திலிருந்து ரெத்னசாமிக்குத் தெரிவிக்கப்பட்டது.

முன்பதிவு செய்தபடி யாரும் விருந்திற்கும் வராததால் ரெத்னசாமி காவல்துறையிடம் புகாரளித்தார்.

ஃபூச்சுன் தொடக்கப் பள்ளி, இச்சம்பவத்தில் தங்களுக்குத் தொடர்பு கிடையாது என்று கூறியது. விநியோகிப்பாளர் என்று ரெத்னசாமியிடம் அறிமுகம் செய்யப்பட்ட ‘டாடா வைன்ஸ்’ நிறுவனத்திற்கும் இதுகுறித்துத் தகவல் எதுவும் தெரியவில்லை.

இந்த மோசடி குறித்த விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்