நில எல்லைச் சாவடிகளில் ஒரே குடிநுழைவு முறை தொடர்பில் மலேசியா பரிந்துரைத்தால் அதன் சாத்தியம் குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
எல்லையில் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் வழிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துவருவதாகக் கூறப்பட்டது.
சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையிலான 400 மீட்டர் நீளமுள்ள இணைப்புப் பாலம் உலகின் ஆகப் பரபரப்பான பாலங்களில் ஒன்று. காரில் சில நிமிடங்களில் கடந்துவிடக்கூடிய தொலைவு என்றபோதும் இங்கு மணிக்கணக்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுண்டு.
சென்ற வெள்ளிக்கிழமை மலேசியாவின் திட்டம் குறித்து த ஸ்டார் நாளேடு தகவல் வெளியிட்டிருந்தது. ஆனால் இதுவரை மலேசியாவிடமிருந்து பரிந்துரை ஏதும் பெறப்படவில்லை என்று ஆணையத்தின் பேச்சாளர் கூறினார். நெரிசலைக் குறைக்க சிங்கப்பூர் தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியின் லாரி தடங்களில், 2020ல் கார்களுக்காக மேலும் ஆறு முகப்புகள் அமைக்கப்பட்டன. பேருந்துப் பயணிகளுக்காக 2022ல் மேலும் 64 தானியக்க முகப்புகள் அமைக்கப்பட்டன. மலேசியாவுடன் தொடர்ந்து அணுக்கமாகச் செயல்படவிருப்பதாக ஆணையம் சொல்லிற்று.

