செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
451236e2-2680-40ab-86c3-0b025660754c
-

மின்னிலக்க நாணய மோசடி தொடர்பாக நீதிமன்ற வழக்கு

மோசடிக்காரர் என்று தெரியாமல் ஒருவரிடம் தமது மின்னிலக்க நாணயத்தை விற்ற ஒரு நபர், அந்த விற்பனையில் பெற்ற $10,001 தொகையைத் தம்வசம் வைத்துக்கொள்ளலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அத்தொகை திரு லிங் கொக் ஹுவா என்பவர் மோசடியில் இழந்த பணம் ஆகும். அதைக் கொண்டு மோசடிக்காரர் திரு வில்லியம் லிம் டியன் ஹாவ் என்பவரிடமிருந்து மின்னிலக்க நாணயத்தை வாங்கினார். மோசடி செய்த $10,001ஐ திரு லிம்மிடம் மாற்றிவிட்டார்.

அச்சம்பவத்தை விசாரித்த காவல்துறையினர் பணத்தைக் கைப்பற்றினர். பணத்தைத் தொலைத்தவரும் மின்னிலக்க நாணயத்தைத் தெரியாமல் விற்று பணம் பெற்றவரும் அத்தொகை தங்களுக்கே சொந்தம் என்று நீதிமன்றத்தில் வாதிட்டிருந்தனர். இருவரும் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் சட்டப்படி அப்பணம் இருவருக்கும் சொந்தம் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி ஏடிட் அப்துல்லா நேற்று கூறினார்.

திரு லிம், சட்டப்படி செல்லும் பரிவர்த்தனையில் பணத்தைப் பெற்றதை நீதிபதி சுட்டினார். குற்றவியல் சட்டத்தின்கீழ், அத்தொகை கைப்பற்றப்பட்ட அவரிடமே திருப்பித் தரப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

மோசடி செய்த முன்னாள் அடித்தளத் தலைவருக்கு ஏழு மாதம் சிறை

உட்லண்ட்ஸ் வட்டாரம் '8' குடியிருப்பாளர் கட்டமைப்பின் (ஆர்என்) முன்னாள் தலைவர் ஒருவர் செயற்குழுவில் இருந்த இருவரை ஏமாற்றி, $10,800 மோசடி செய்தார். டியோ கம் வெங், 60, (படம்) எனும் அந்நபர் அப்போதைய துணைத் தலைவர் கியன் டூ சோங், அப்போதைய பொருளாளர் சிவநேசன் சாமிநாதன் இருவரையும் ஏமாற்றி பணம் பெற்றார்.

அப்போது பணமுடையில் இருந்த டியோ, அமைப்புக்காக பொருள்கள், சேவைகள் ஆகியவற்றைப் பெறச் சொந்தப் பணத்தைச் செலவிட்டதாகப் போலிக் கணக்குக் காட்டினார். 2018ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடையே குற்றங்கள் நிகழ்ந்தன.

மேலும், உறவைத் வெளிப்படுத்தாமல் தமது மனைவியைத் துப்புரவாளர் பணியில் டியோ அமர்த்தினார். மற்றவர்களுக்குத் தெரிவிக்காமல் தமது சொந்த நிறுவனத்தை பழுதுபார்ப்பு, வண்ணம் பூசும் பணிகளில் அவர் ஈடுபடுத்தினார்.

மோசடி தொடர்பான ஐந்து குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட டியோவுக்கு நேற்று ஏழு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2021 நவம்பரில் அவரை அடித்தத்தளத் தொண்டூழியராக நீக்கிவிட்டதாக மக்கள் கழகம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.

பலமுறை மானபங்கம் செய்த

மாற்றாந்தந்தைக்கு 20 மாதச் சிறை

தமது மனைவியின் மகளுக்குக் கடந்த 2016 முதல் 2019 வரை பலமுறை பாலியல் தொந்தரவு தந்த மாற்றாந்தந்தைக்கு நீதிமன்றம் நேற்று 20 மாதச் சிறைத் தண்டனையை விதித்துள்ளது. குற்றம் புரிந்த ஆடவரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாரும் 2014ல் மணமுடித்தனர். அதன் பிறகு, இளம்பெண்ணுக்கும் ஆடவருக்கும் பாசமிகு தந்தை-மகள் உறவு உண்டானது.

ஆனால் 2016ல் அந்த ஆடவர், அப்பெண்ணை மானபங்கம் செய்யத் தொடங்கினார். அப்போது அப்பெண்ணுக்கு 16 வயது. சென்ற 2018ஆம் ஆண்டிலும் 2019ஆம் ஆண்டிலும் அந்த ஆடவர் அவரை மானபங்கம் செய்தார். அவரை முத்தமிட முயன்றது, அந்தரங்க உறுப்புகள், மார்பகங்கள் போன்றவற்றைத் தொட்டது ஆகியவை அக்குற்றங்களில் அடங்கும்.

தமது தாயாரும் அவரது கணவரும் சண்டையிட்டுப் பிரிந்துவிடுவர் என்ற பயத்தில் பாதிக்கப்பட்ட பெண் முதலில் தாயாரிடம் உண்மையைக் கூறவில்லை.

ஆனால் 2019ல் இறுதி மானபங்கச் சம்பவத்துக்குப் பிறகு, அப்பெண் தாயாரிடம் உண்மையைச் சொல்ல, காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.