தீபாவளி வாரயிறுதியில் லிட்டில் இந்தியாவில் போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் அதிகமான அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவர். போக்குவரத்தைக் கட்டுப்படுத்தவும் வாகனமோட்டிகளுக்கு உதவவும் குறிப்பிட்ட சாலைகளிலும் சாலைச் சந்திப்புகளிலும் துணைக் காவல் அதிகாரிகள் நிறுத்தப்படுவர்.
வாகனமோட்டிகள் மாற்று வழிகளில் பயணம் செய்ய அறிவுத்தப்படுகின்றனர். சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்துவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை வெளியிட்ட அறிக்கை சுட்டியது.
லிட்டில் இந்தியாவில் வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணி முதல் செவ்வாய்க்கிழமை 25ஆம் தேதி காலை 7 மணி வரையில் பொது இடங்களில் மது அருந்த அனுமதிக்கப்படாது என்றும் அறிக்கை கூறியது. அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு பிறகு மது விற்கும் கடைகளின் மது விற்பனை உரிமம் ரத்தாகலாம். முன்னைய மதுக் கட்டுப்பாடு (விநியோகம் மற்று நுகர்வு) சட்டம் 2015ன் கீழ், லிட்டில் இந்தியா மதுக் கட்டுப்பாட்டு வட்டாரமாக அறிவிக்கப்பட்டது.
இச்சட்டத்தின் கீழ், மது அருந்தக்கூடாத நேரத்தில் பொது இடத்தில் மதுபானம் அருந்துவோருக்கு கூடுதல் தண்டனைகள் விதிக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் $1,500 வரை அபராதம் விதிக்கப்படும். மீண்டும் குற்றம் புரிவோருக்கு நான்கரை மாதங்கள் வரை சிறை, $3,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.


