சிங்கப்பூரின் 'கூலஸ்ட்' குடியிருப்புப் பகுதியாக லிட்டில் இந்தியா தேர்வுசெய்யப்பட்டுள்ளது. உலகின் ஆக வசீகரிக்கும் குடியிருப்புப் பகுதிகளின் பட்டியலில் லிட்டில் இந்தியா 19வது இடத்தை பிடித்துள்ளது. 'டைம் அவுட்' எனும் பொழுதுப்போக்குத் தளம் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஹாங்காங், மெல்பர்ன் போன்ற நகரங்களில் உள்ள வட்டாரங்களை லிட்டில் இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது.
பழங்கால கடைவீடுகள், மரபுடைமைத் தலங்கள் போன்றவை இவ்வட்டாரத்தின் தனித்தன்மையாகும். ஒருபுறம் வழிபாட்டுத் தலங்கள், கடைகள். மறுபுறம் வெளிநாட்டிலிருந்து வரும் இளம் சுற்றுப்பயணிகள் கூடும் மதுபானக்கூடங்கள். இப்படி பழமையும் நவீனமும் கலக்கும் சங்கமமாக இவ்வட்டாரம் திகழ்கிறது.
தீவின் மத்திய பகுதியான ஆர்ச்சர்ட் சாலையின் அருகே தேக்கா இருந்தாலும், இந்த வட்டாரத்தில் காலெடுத்து வைக்கும்போது 1970கள் காலகட்டத்துக்கு நாம் கொண்டுசெல்லப்படுகிறோம். இந்தக் காரணத்தினாலே பலர் லிட்டில் இந்தியாவைத் தேர்வு செய்ததாகக் குறிப்பிட்டனர்.
உலகின் 'கூலஸ்ட்' குடியிருப்பு வட்டாரத்தை தேர்வுசெய்ய, உலகெங்கும் வாழும் கிட்டத்தட்ட 20,000 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. மெக்சிகோவில் உள்ள குவாடலரஹாரா எனும் இடம் முதலிடத்தைப் பிடித்தது.


