தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமத் தலைமை நிர்வாகி வலியுறுத்து
சிங்கப்பூர் மக்கள்தொகை மூப்படைந்துவரும் நிலையில் தரமான பராமரிப்பை வழங்கும் வகையில் சுகாதாரப் பராமரிப்பு வழங்கும் வழிமுறை மாற வேண்டியது அவசியம் என்று தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தின் தலைமை நிர்வாகி பேராசிரியர் ஃபிலிப் சூ வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், மூப்படையும் சமூகத்திற்குச் சிறந்த பராமரிப்பை வழங்க குழுமம் பல முக்கிய மாற்றங்களை அடையாளம் கண்டுள்ளது. ஏனெனில், முதியவர்கள் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதனால், சுகாதாரப் பராமரிப்பு சேவைகளுக்கான தேவையும் அதிகரிக்கும்.
நோயாளி ஒருவர், நிபுணத்துவ மருத்துவர் அல்லது ஆரம்ப சுகாதார மருத்துவரைப் பார்த்தாலும் அல்லது மருத்துவமனையை நாடினாலும், அதைப் பொறுத்தல்லாமல் ஒவ்வொருவருக்கும் சேவையாற்றும் வகையில் ஒற்றைப் பராமரிப்புத் திட்டத்தைக் கொண்டிருப்பது அவற்றில் ஒன்று.
'ஹெல்த்தியர் எஸ்ஜி' திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட இருக்கிறது. இதனையடுத்து, நோய்த்தடுப்பு மருத்துவம், ஒருங்கிணைந்த பராமரிப்புத் திட்டங்களுக்காக மருத்துவத்துறைத் தலைவர்களின் தலைமையில் பல குழுக்களை தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் அமைத்துள்ளது.
இந்நிலையில், தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தின் 20வது சிங்கப்பூர் சுகாதார, உயிர்மருத்துவ மாநாட்டில் தொடக்க உரையாற்றியபோது, அதன் பராமரிப்பின்கீழ் வரும் 1.5 மில்லியன் பேருக்குப் பொறுப்புடன் பராமரிப்பு வழங்குவதன் அவசியம் குறித்துப் பேராசிரியர் சூ வலியுறுத்தினார்.
அதற்கு, தனியார் மருத்துவர்கள் உட்பட பல்வேறு பங்காளிகளுடன் தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் அணுக்கமாகப் பணியாற்ற வேண்டியுள்ளது என்றார் அவர்.
சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெற்ற இந்த இரண்டுநாள் மாநாட்டில் சுகாதாரப் பராமரிப்புத் துறையுடன் தொடர்புடைய ஏறக்குறைய 1,350 பேர் கலந்துகொண்டனர்.
சுகாதாரப் பராமரிப்பில் தொழில்நுட்பம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது குறித்தும் ஊழியரணியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் மாநாட்டில் ஆராயப்பட்டது.

